கோலாலம்பூர்: மலேசியாவின் ஓய்வூதிய நிதித் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதை அடுத்து, அதிலிருந்து மலேசியர்கள் தங்கள் ஓய்வூதியச் சேமிப்புக் கணக்கிலிருந்து கடந்த மே மாதம் ஏறத்தாழ 7.81 பில்லியன் ரிங்கிட் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜூன் 10ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், ஜூன் 24ஆம் தேதி நிலவரப்படி கூடுதலாக 6.98 பில்லியன் ரிங்கிட் பணம் திரும்பப் பெறப்பட்டது தெரிய வந்துள்ளது.
55 வயதுக்கும் குறைவான ஊழியர் சேமநிதி உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 3.16 மில்லியன் பேர் பணத்தை வெளியே எடுத்ததாக ஜூலை 10ஆம் தேதியன்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
ஊழியர் சேமநிதித் திட்டம் (இபிஎஃப்) என்பது மலேசியாவின் ஓய்வூதிய நிதியாகும். இதன் மொத்த மதிப்பு ஏறத்தாழ 1.19 டிரில்லியன் ரிங்கிட். உலகிலேயே ஆகப் பெரிய ஓய்வூதிய நிதியில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வூதியக் கணக்கிலிருந்து முன்கூட்டியே பணத்தை எடுத்தால் அந்தச் சேமிப்புத் திட்டம் மூலம் கிடைக்கக்கூடிய சில பலன்களைப் பெற முடியாத சூழல் ஏற்படக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
இதற்கு மாறாக, விதிமுறை மாற்றத்தின் காரணமாக உறுப்பினர்கள் தங்களுக்குச் சொந்தமான பணத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று முடிவெடுக்கலாம் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.