பெட்டாலிங் ஜெயா: மங்கோலியாவைச் சேர்ந்த விளம்பர அழகியான அல்டன்துயா ஷரீபு, 2006ஆம் ஆண்டில் மலேசியாவில் கொலை செய்யப்பட்டார்.
2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அல்டன்துயா துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு பிறகு ஷா ஆலமில் உள்ள வனப் பகுதியில் வெடிபொருள்களைப் பயன்படுத்தி அவரது உடல் சிதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கொலைக்கும் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நெருக்கமானவரான அப்துல் ரசாக் பகின்டாவுக்கும் தொடர்பு உள்ளது என்று பரவலாகப் பேசப்பட்டது.
அல்டன்துயா கொலை செய்யப்பட்டபோது நஜிப், மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்தார்.
அவரது உதவியாளராக ரசாக் பகின்டா இருந்தார்.
அல்டன்துயாவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ரசாக் பகின்டாவும் அல்டன்துயாவும் காதலர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரசாக் பகின்டா குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அல்டன்துயாவைக் கொலை செய்ததாக முன்னாள் காவல்துறை அதிகாரிகளான அஸிலா ஹட்ரி, சிருல் அஸார் உமர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அஸிலா தற்போது காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் சிருல் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி ஓடினார்.
இதற்கிடையே, அல்டன்துயா கொலை தொடர்பாக அவரது குடும்பத்தார் தொடுத்துள்ள வழக்கில் சாட்சியம் அளிக்க ரசாக் பகின்டா மறுத்துவிட்டார்.
சாட்சியம் அளிக்க அவர் மறுப்பு தெரிவித்திருப்பதை அடுத்து, அல்டன்துயாவின் கொலைக்கு அவர் உடந்தையாக இருந்திருக்கக்கூடும் என்று சந்தேகம் ஏற்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி வசீர் அலாம் மைடின் மீரா கடந்த வாரம் தமது 90 பக்கத் தீர்ப்பில் தெரிவித்தார்.
அல்டன்துயாவைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பிறகு, வெடிபொருள்களைப் பயன்படுத்தி அவரது உடலைச் சிதைத்ததை அஸிலாவும் சிருலும் பல காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டதாக நீதிபதி வசீர் கூறினார்.
கொலைக்கு முன்பும் பிறகும் ரசாக் பகின்டா நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும்போது அல்டன்துயாவைக் கொல்ல அந்த இரு முன்னாள் காவல்துறை அதிகாரிகளுடன் அவர் சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக நீதிபதி வசீர் தெரிவித்தார்.
அல்டன்துயாவின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகையாக 5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது நியாயமானது, போதுமானது என்று தாம் கருதுவதாக அவர் கூறினார்.
நீதிபதியின் தீர்ப்பு, இழப்பீட்டுத் தொகையை எதிர்த்து ரசாக் பகின்டா மட்டுமல்லாது மலேசிய அரசாங்கமும் மேல்முறையீடு செய்துள்ளது.
அல்டன்துயாவின் கொலையைச் சுற்றி மர்மம் நீடிப்பதாகவும் 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகை கொடுக்க வேண்டும் என்றும் அவரது பெற்றோரும் மகனும் 2007ஆம் ஆண்டில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கு நடத்தப்படாமல் இந்த விவகாரத்தை மலேசிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வு காணும் சாத்தியக்கூறுகளை அல்டன்துயாவின் குடும்பத்தாரைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள் ஆராய்வதாக ஃப்ரீ மலேசிய டுடே செய்தி நிறுவனம் 2023ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது.

