சோல்: தென்கொரியாவில் பதிவான, திட்டமிடப்படாத திடீர் வேகமெடுக்கும் (எஸ்யுஏ) வகையைச் சேர்ந்த சம்பவங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 60 வயதுக்கும் குறைவானர்கள் தொடர்புடையவை என தெரிய வந்துள்ளது.
அரசாங்கம் திரட்டிய இத்தகவல் முதிய வயதுடைய ஓட்டுநர்களின் தவறுகளே அதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்பதற்கு முரணாக அமைந்துள்ளது.
தென்கொரியாவில் ஜூலை 1ஆம் தேதி சோல் சிட்டி ஹால் அருகே நிகழ்ந்த விபத்துக்குப் பிறகு முதிய வயதுடைய ஓட்டுநர்களின் ஆற்றல் தொடர்பில் கவலைகள் எழுந்தன.
ஒன்பது பேர் உயிரிழந்த அந்த விபத்தில் 68 வயது கார் ஓட்டுநர் சம்பந்தப்பட்டு இருந்தார்.
இந்த விபத்துக்குப் பின்னர் கொரிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் தகவல்களைத் திரட்டியது.
கொரியாவின் முக்கிய எதிர்க்கட்சியான கொரிய ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ஆன் டே-ஜுனிடம் ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் வியாழக்கிழமை (ஜூலை 11) வெளியிடப்பட்டன.
இவ்வாண்டு ஜூன் வரை எஸ்யுஏ வகையைச் சேர்ந்த 456 சம்பவங்கள் பதிவாயின. அவற்றில் 396 சம்பவங்கள் தொடர்புடைய ஓட்டுநர்களின் வயது சரிபார்க்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதில் 122 சம்பவங்கள் 60களின் வயதுடையே ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்டு இருந்தன. 70களில் உள்ளோர் சம்பந்தப்பட்ட 46 சம்பவங்களும் 80களின் வயதுடையோர் சம்பந்தப்பட்ட மூன்று சம்பவங்களும் பதிவாகி இருந்தன.
அதேநேரம், 50களின் வயதுடையோர் சம்பந்தப்பட்ட 108 சம்பவங்கள் நிகழ்ந்தன. 40களின் வயதுடையோர் 80 சம்பவங்களிலும் 30களின் வயதுடையோர் 30 சம்பவங்களிலும் 20களின் வயதுடையோர் ஏழு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டு இருந்தனர்.
ஆக, 60 வயதுக்கு மேற்பட்டோர் 171 சம்பவங்களிலும் 60க்கும் குறைவான வயதுடையோர் 225 சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டு இருந்தனர்.
ஜூலை 1 விபத்துக்குப் பிறகு, மூத்த ஓட்டுநர்களுக்கான உரிமத்தில் நிபந்தனைகளை விதிக்கும் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் ஆராய வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்து உள்ளன.
மூத்த ஓட்டுநர் உரிமத்திற்கு நிபந்தனைகளை விதிக்கும் திட்டம் கடந்த மே மாதம் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், பொதுமக்களின் ஆதரவு போதுமானதாக இல்லாததால் அந்த யோசனை கைவிடப்பட்டது.
இருப்பினும், மூத்த ஓட்டுநர்களே விபத்துக்குக் காரணம் என்னும் கண்ணோட்டத்திற்கு எதிராக நிபுணர்களின் கருத்து அமைந்து உள்ளது.
“அடிக்கடி நிகழும் எஸ்யுஏ விபத்துகளில் எல்லா வயதுப் பிரிவினரும் சம்பந்தப்பட்டு உள்ளனர். ஆயினும், சிட்டி ஹால் விபத்துக்குப் பிறகு மூத்த ஓட்டுநர்களே அதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டம் எழுந்துள்ளது,” என்று டேலிம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிம் பில்சூ தெரிவித்து உள்ளார்.

