தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நேப்பாளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்; அறுபது பேர் காணவில்லை

1 mins read
d766ff5f-8c65-4697-a5b8-0ff0e121867f
தேடி, மீட்புப் பணியில் ஈடுபட்ட நேப்பாள ஆயுதப் படை வீரர்கள். இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. - படம்: இபிஏ

காட்மாண்டு: நேப்பாளத்தில் ஓயாமல் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் நெடுஞ்சாலையிலிருந்து இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில் அறுபதுக்கும் மேற்பட்டோர் காணவில்லை.

சிட்வான் மாநிலத்தில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரி கிமானந்தா புசால், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

“பேருந்துகளில் குறைந்தது 66 பேர் பயணம் செய்தனர். அவர்களில் மூவர் மட்டும் ஆற்றில் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்று திரு புசால் மேலும் தெரிவித்தார்.

எத்தனை பேர் உயிர் பிழைத்தார்கள் என்பது தற்போது தெரியவில்லை என்றார் அவர்.

தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாராயங்காட்-முக்லிங் நெடுஞ்சாலையில் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன.

பிரதமர் புஷ்பா கமல் டஹால், ‘எக்ஸ்’ ஊடகத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டிருந்தார்.

உயிர் பிழைத்தவர்களைத் தேடி, மீட்க அனைத்து அரசாங்க அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இமய மலை நாடான நேப்பாளத்தில் சாலைகள் மோசமாக இருப்பதாலும் வாகனங்கள் சரிவர பராமரிக்கப்படாததாலும் ஓட்டுநர்கள் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுவதாலும் விபத்துகள் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன.

பருவ மழை பெய்யும் சமயங்களில் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்படுவதால் சாலைப் பயணம் ஆபத்தாக விளங்குகிறது.

குறிப்புச் சொற்கள்