சுற்றுலா மோசடி: மலேசியாவில் இந்தியர்கள் 15 பேர் கைது

2 mins read
793829fe-fece-4b3d-b0cc-c93f6e3877bf
இந்தியர்கள் கைதான விவரத்தைச் செய்தியாளர்களிடம் தெரிவித்த வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ராம்லி முகம்மது யூசுஃப் (வலது). - படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசியாவில் சுற்றுலா மோசடி தொடர்பில் இந்தியர்கள் 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஆணையர் ராம்லி முகம்மது யூசுஃப் தெரிவித்துள்ளார்.

தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ஓர் அலுவலகத்தில் ஜூலை 1ஆம் தேதி வணிகக் குற்றவியல் காவல்துறைப் பிரிவு மேற்கொண்ட அதிரடிச் சோதனையின்போது அவர்கள் பிடிபட்டனர். அவர்களில் 12 பேர் ஆண்கள், மூவர் பெண்கள்.

“அந்த அலுவலகத்திலிருந்து 17 கைப்பேசிகள், சுற்றுலாத் தொகுப்பு குறித்த நான்கு துண்டுப் பிரசுரங்கள், 15 பெயரட்டைகள், ஒரு மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கைப்பற்றினோம்,” என்று திரு ராம்லி வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 12) செய்தியாளர்களிடம் கூறினார்.

இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்தே அந்த மோசடிக் கும்பல் செயல்பட்டு வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் சொன்னார்.

“வெளிநாட்டவர்களைக் குறிவைத்து, துண்டுப் பிரசுர விநியோகம் மூலம் அவர்கள் தங்களது சுற்றுலாத் தொகுப்புகளை விளம்பரம் செய்துவந்தனர்.

“உலகில் எந்த நாட்டிற்கும் செல்ல, 50 நாள்களுக்கு 50,000 ரிங்கிட், 40 நாள்களுக்கு 25,000 ரிங்கிட், 14 நாள்களுக்கு 14,000 ரிங்கிட் என மூன்று தொகுப்புகளை அக்கும்பல் விளம்பரம் செய்தது.

“சோதனையில் அந்நிறுவனம் உரிமமின்றிச் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது,” என்று திரு ரம்லி விளக்கினார்.

அந்த மோசடிக் கும்பல் மூலம் 14,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாகக் காவல்துறைக்கு இரண்டு புகார்கள் வந்ததாக அவர் குறிப்பிட்டார்

கைதான அனைவரும் ஜூலை 20ஆம் தேதிவரை காவலில் வைக்கப்பட்டிருப்பர்.

இதனிடையே, இம்மாதம் 2ஆம் தேதி செராசில் குடியிருப்பு வளாகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் உரிமமின்றிக் கடன் வழங்கும் கும்பலைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் எழுவர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் 13 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள். அவர்களிடமிருந்து நான்கு கணினிகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

கடந்த மூன்று மாதங்களாக, உள்ளூர்வாசிகளைக் குறிவைத்து அக்கும்பல் செயல்பட்டு வந்ததாகத் திரு ராம்லி சொன்னார்.

பத்து முதல் 15% வட்டிக்கு 500 முதல் 10,000 ரிங்கிட்வரை அக்கும்பல் கடன் வழங்கி வந்ததாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்