தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலச்சரிவில் புதையுண்ட வேன்; 7 பேர் மரணம்

2 mins read
33b7132c-f6cf-4536-b47a-e27bfef16bf9
வடக்கு வியட்னாமில் கடந்த ஆண்டு நிகழ்ந்த நிலச்சரிவு. - கோப்புப் படம்: ஊடகம்

ஹனோய்: வடக்கு வியட்னாமில் நிலச்சரிவுக்குள் வேன் ஒன்று புதைந்ததால் அந்த வேனில் இருந்த ஏழு பேர் மாண்டுவிட்டதாக அரசாங்க ஊடகத் தகவல்கள் சனிக்கிழமை (ஜூலை 13) தெரிவித்தன.

வியட்னாமில் தற்போது பருவமழை காலம் என்பதால் பலத்த மழை கொட்டி வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதன் காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது.

குறிப்பாக, மலைப் பகுதிகளுக்குச் செல்லக்கூடிய பாதைகள் ஆபத்தானவையாக மாறி வருகின்றன.

இந்நிலையில், ஹா கியாங் மாநிலத்தில் உள்ள பாக் மீ மாவட்டத்தின் வழியாக அதிகாலை 4 மணியளவில் வேன் ஒன்று சென்றுகொண்டு இருந்தது.

16 பேர் அமரக்கூடிய அந்த வேன் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதையுண்டது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புப் பணியாளர்கள், ஒரு குழந்தை உட்பட ஏழு சடலங்களை மீட்டதாக அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

இதர ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் யாராவது காணாமற்போய் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையே, மாண்டவர் எண்ணிக்கை 9 என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது.

சேறும் சகதியும் நிறைந்த மலைப்பாதையில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்களுடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள், அகல்பொறி வாகனம் போன்றவற்றைக் காட்டும் புகைப்படங்களும் காணொளிகளும் அரசாங்க ஊடகப் பதிவில் இடம்பெற்று இருந்தன.

மற்றொரு சம்பவத்தில் மூவர் பயணம் செய்த வாகனம் ஒன்று அதே பகுதியில் நிலச்சரிவில் சிக்கியதாகவும் அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்றும் சில தகவல்கள் கூறின.

ஹா கியாங் மாநிலத்தில் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் மோட்டார் சைக்கிளில் சுற்றுலா செல்வது வழக்கம்.

குறிப்புச் சொற்கள்