ஹமாஸ் குழுவின் ராணுவத் தலைவர் முகம்மது டெய்ஃப்பைக் குறிவைத்து காஸாவில் சனிக்கிழமை (ஜூலை 13) இஸ்ரேலிய வான்படை நடத்திய தாக்குதலில் 72 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
அந்தத் தாக்குதலில் டெய்ஃப் உயிரிழந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.
காஸாவின் தென் பகுதி நகரான கான் யூனிஸின் மேற்கே அல்-மவாஸி என்னும் பகுதியில் மனிதாபிமான மண்டலம் என்று இஸ்ரேல் அறிவித்த பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் டெய்ஃப் ஒளிந்து இருந்ததாக இஸ்ரேலின் ராணுவ வானொலி கூறியது.
இஸ்ரேல் மேற்கொண்ட ஏழு படுகொலைத் தாக்குதலில் அவர் தப்பி இருந்தார்.
சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 71 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 289 பேர் காயமடைந்ததாக காஸா சுகாதார அமைச்சு கூறியது.
இந்நிலையில், போர் நிறுத்தத்துக்குப் பிறகு, காஸாவின் வடக்குப் பகுதியில் பாலஸ்தீனர்கள் அனைவரும் செல்லலாம் என்று கூறியிருந்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தற்போது மனதை மாற்றிக்கொண்டுள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பிறகு காஸாவின் வடக்குப் பகுதிக்கு ஆயுதம் ஏந்திய பாலஸ்தீனர்கள் திரும்ப தடை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நெட்டன்யாகு முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கையால் போர் நிறுத்த பேச்சுவார்த்தை பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்பு இஸ்ரேல் முன்வைத்த பரிந்துரைகளுக்கு அவர் மதிப்பளிக்காமல் அவற்றை ஓரங்கட்டுவதாகவும் அவற்றில் அவர் கடப்பாடு கொண்டிருக்கவில்லை என்றும் பேசப்படுகிறது.
இஸ்ரேல் சமர்ப்பித்திருந்த பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிரதமர் நெட்டன்யாகுவின் மனமாற்றம் பேச்சுவார்த்தைக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 5ஆம் தேதியன்று கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.
நிரந்தரப் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்படும் என்று ஹமாஸ் அமைப்பு அண்மையில் தெரிவித்திருந்தது.
ஆனால், இஸ்ரேலின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை காஸாவில் போர் தொடரும் என்று ஜூலை 7ஆம் தேதியன்று இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.
ஹமாஸ் அமைப்பு வேரோடு அழியும் வரை, பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை காஸா மீதான தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் போராளிகள் கிட்டத்தட்ட 1,200 பேரைக் கொன்றனர்.
அதுமட்டுமல்லாது, ஹமாஸ் அமைப்பு 250க்கும் அதிகமானோரைப் பிடித்துச் சென்று பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
போரின் காரணமாக இதுவரை 38,000க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டதாகவும் மில்லியன்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்கள் அன்புக்குரியவர்களையும் உடைமைகளையும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருப்பதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.