கோலாலம்பூர்: மலேசியாவில் நஞ்சு காரணமாக மாண்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாண்டோரில் பெரும்பாலானோர் நான்கு வயதுக்கும் குறைவானவர்கள்.
இதுதொடர்பாக, 2024ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை ஏறத்தாழ 1,200லிருந்து 1,300 வழக்குகள் பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
“நஞ்சு காரணமாகப் பாதிப்பு ஏற்பட்டதாக 2022ஆம் ஆண்டில் 2,913 அழைப்புகள் கிடைத்தன. இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 3,153ஆக அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நான்கு வயதுக்கும் குறைவானவர்கள்,” என்று மலேசியாவின் தேசிய நஞ்சு மையத்தின் தலைமை மருந்தியல் நிபுணர் சுலாஸ்திரி சம்சுதீன் கூறினார்.
நஞ்சு தொடர்பான தகவல்களை வழங்குவதுடன் அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் இந்த அமைப்பு கவனித்துக்கொள்கிறது.
அண்மையில், கெடா மாநிலத்தின் கூலிம் நகரில் இரு சகோதரர்கள் மரணமடைந்தனர். எலி நஞ்சு கலந்த தின்பண்டங்களை அவர்கள் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இரு சகோதரர்களும் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜூலை 11ஆம் தேதியன்று மூன்று வயது முகம்மது அகில் சியாவ்கி, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது இளைய சகோதரரான 2 வயது முகம்மது லூத் சியாவ்கி, ஜூலை 12ஆம் தேதி பிற்பகல் 1.24 மணி அளவில் உயிரிழந்தார்.
இந்தச் சிறுவர்களின் கிராமத்தில் தமது பயிரில் விலங்குகள் மேயாதிருக்க விவசாயி ஒருவர் வேலி அமைத்து அதன்மீது நஞ்சு கலந்த தின்பண்டங்களை வைத்திருந்ததாக நம்பப்படுகிறது.
அது தெரியாமல் அந்த இரு சிறுவர்களும் அதைச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
சிலாங்கூர், ஜோகூர், பேராக், சாபா, கெடா ஆகிய மாநிலங்களில் நஞ்சு தொடர்பான மரணங்கள் அதிகமாக இருப்பதாக 2024ஆம் ஆண்டுக்கான தரவுகள் காட்டுவதாக திருவாட்டி சுலாஸ்திரி கூறினார்.
இந்த மாநிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்து, தொழில்துறை ரசாயனங்கள் ஆகியவை அதிகம் பயன்படுத்தப்படுவதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தெரிந்தே நஞ்சு வைத்து ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதும் பிறருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எண்ணம் இல்லாது, வேறு காரணங்களுக்காக நஞ்சைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளும் கிட்டத்தட்ட சமமான அளவில் இருப்பதாக திருவாட்டி சுலாஸ்திரி கூறினார்.
“நஞ்சு காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் பெரும்பாலானோருக்கு வேண்டுமென்றே நஞ்சு வைக்கப்படவில்லை. வேறொரு காரணத்துக்காக வைக்கப்பட்ட நஞ்சை அச்சிறுவர்கள் தெரியாமல் சாப்பிட்டனர். இதுபோன்ற சோக நிகழ்வுகளைத் தவிர்த்திருக்க முடியும்.
“உணவுப் பொருள்களை அடைத்து வைக்க பயன்படுத்தப்படும் கொள்கலன்களில் நஞ்சு வைக்கப்படுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன,” என்றார் திருவாட்டி சுலாஸ்திரி.

