காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழையால் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர், 350க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று தலிபான் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) தெரிவித்தனர்.
கனமழையுடன் பலத்த காற்று வீசியதை அடுத்து, பல மரங்கள் வேருடன் சாய்ந்தன. வீடுகளின் சுவர்களும் கூரைகளும் இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
திங்கட்கிழமை வீசிய புயலில் 40 பேர் இறந்ததாகவும், காயமடைந்த 347 பேர் நங்கர்ஹரில் உள்ள வட்டார மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டதாகவும் பொது சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஜமான் அமர் உறுதிப்படுத்தினார்.
நங்கர்ஹர் மாகாணத்தில் 400க்கும் அதிகமான வீடுகள், 60 மின்கம்பங்கள் அழிந்தன. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஜலாலாபாத் நகரில் தகவல் தொடர்பு குறைந்த அளவிலேயே இருந்தது என்று மாகாண செய்தித் தொடர்பாளர் செடிகுல்லா குரைஷி தெரிவித்தார்.
அழிவின் அளவு மதிப்பிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாகச் சென்று உதவ சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். பாதிப்படைந்தோருக்கு தங்குமிடம், உணவு, மருந்து ஆகியவை வழங்கப்படும்,” என்று ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் திரு ஸபிஹுல்லா முஜாஹித், எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த மே மாதம் பெய்த கனமழையால் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன என்று உலக உணவுத் திட்டம் கூறியது.
இதற்கிடையே, முக்கிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் மாண்டதாகவும் 34 பேர் காயமடைந்ததாகவும் தலிபான் செய்தி நிறுவனமான பக்தர் கூறியது.