டாக்கா: அரசாங்கப் பணிகள் தொடர்பான இட ஒதுக்கீடுகளை எதிர்த்து பங்ளாதேஷில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆர்ப்பாட்டங்கள் மோசமடைந்ததை அடுத்து, பாதுகாப்புப் பணிகளை பங்ளாதேஷ் காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.
பங்ளாதேஷில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் ஆயிரக்கணக்கான கலவரத் தடுப்பு அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசினா வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றார்.
தொடர்ச்சியாக நான்கு தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரசாங்க வேலைக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சுதந்திரப் போராளிகளின் சந்ததியினருக்காக 30 விழுக்காடு அரசாங்கப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பங்ளாதேஷின் தனியார் துறையில் வேலை வளர்ச்சி மந்தமாக உள்ளது.
எனவே, அரசுப் பணிகள் திசையில் பலரது கவனம் திரும்பியுள்ளது.
அரசுப் பணிகளில் இருப்போருக்கு மாதந்தோறும் சம்பளத்துடன் மற்ற சலுகைகளும் கிடைப்பதால் அதில் சேர பலர் விரும்புவதாக பங்ளாதேஷின் மேம்பாட்டுத் துறைக்கான ஆய்வு, கொள்கை ஒருங்கிணைப்புப் பிரிவின் தலைவர் முகம்மது அப்துல் ரசாக் தெரிவித்தார்.
பங்ளாதேஷில் அரசாங்கப் பணிகளில் 56 விழுக்காடு பல்வேறு பிரிவினருக்காக ஒதுக்கப்படுகின்றன.
பெண்களுக்கு 10 விழுக்காடும் வளர்ச்சியடையாத மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு 5 விழுக்காடும் பழங்குடியினருக்கும் 5 விழுக்காடும் உடற்குறையுள்ளோருக்கு ஒரு விழுக்காடும் ஒதுக்கப்படுகின்றன.
அரசாங்கப் பணிகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஜூலை 15ஆம் தேதியன்று ஆயிரக்கணக்கானோர், பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சியின் மாணவரணி உறுப்பினர்களுடன் மோதினர்.
மேலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நாடெங்கும் பல பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.