டாக்கா: பங்ளாதேஷில் மாணவர்களின் தொடர் போராட்டத்தால் நாடே கலவர பூமியாக மாறியுள்ளது. இதையடுத்து கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும் காலவரம்பின்றி மூட அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
தெற்கு ஆசிய நாடான அந்நாட்டில் நான்கு வாரங்களாக மாணவர்கள் போராடி வருகின்றனர்.
அரசாங்க வேலை ஒதுக்கீட்டை எதிர்த்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. 1971ல் பாகிஸ்தானிலிருந்து நாடு சுதந்திரமடைவதற்காக போராடிய விடுதலைப் போராட்டக்காரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 30 விழுக்காடு அரசாங்க வேலை ஒதுக்கப்படுவது முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் இந்த ஒதுக்கீடு மாணவர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 170 மில்லியன் மக்கள் தொகையில் ஏறக்குறைய 32 மில்லியன் இளம் பங்ளாதேஷிகள் வேலை இல்லாமல் அல்லது கல்வியில் மேம்படாமல் இருக்கின்றனர்.
ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஏற்கெனவே நிலுவையில் இருப்பதால் பிரதமர் ஷேக் ஹஸினா ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. மேலும் ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் ‘ரஸாக்கர்’ என்று குறிப்பிடப்படுவதால் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன. 1971 போரின்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் ‘ரஸாக்கர்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
ஜூலை 16ஆம் தேதி மோதலில் மாண்ட அறுவறில், மூன்று மாணவர்கள் அடங்குவர் என்று காவல்துறை தெரிவித்தது.
இதற்கிடையே அமைதியாக போராடும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பங்ளாதேஷ் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம் என்று ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் ‘எக்ஸ்’ ஊடகத்தில் பதிவிட்ட தகவலில் வலியுறுத்தியது.

