தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்து உதவித் திட்டத்திற்கு நிதி சேர்க்க $4.5 பி. பட்ஜெட் தாக்கல்

2 mins read
3b9ea420-ef9a-4f6d-bb2d-bbe598153464
தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தாவிசின் - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்து மக்களுக்கான உதவித் திட்டத்திற்குக் கூடுதல் நிதி தேவைப்படுவதால் 122 பில்லியன் பாட் (S$4.5 பில்லியன்) மதிப்பிலான வரவுசெலவுத் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரெத்தா தாவிசின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அவர் அறிமுகம் செய்துள்ள ரொக்க உதவித் திட்டம் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனைக் குறைகூறி வருகின்றனர்.

உதவித் திட்டத்தின் மொத்த மதிப்பீடு 500 பில்லியன் பாட்.

தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளியல் நாடான தாய்லாந்து தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.

கடந்த ஆண்டு 1.9 விழுக்காடு வளர்ச்சி கண்ட நிலையில் தனது வட்டார நாடுகளின் வளர்ச்சியோடு அது போட்டி போட்டு முன்னேறத் துடிக்கிறது.

இந்நிலையில், தாய்லாந்தின் 50 மில்லியன் மக்கள் ஒவ்வொருவருக்கும் 10,000 பாட் உதவித் தொகை வழங்க திரு ஸ்ரெத்தா திட்டம் தீட்டி உள்ளார்.

தாய்லாந்து மக்கள் அந்தத் தொகையை ஆறு மாத காலத்திற்குச் செலவிடும் வகையில் அவர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்கான திட்டம் அது.

இருப்பினும், நிதி நெருக்கடி காரணமாக அந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த அவரால் இயலவில்லை. நிதி சேர்ந்த பின்னர் ஆண்டின் இறுதிக் காலாண்டில் அந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ய தாய்லாந்து அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“பொருளியலுக்கு ஊக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எதுவும் செய்யப்படாவிட்டால் நாம் நெருக்கடியைச் சந்திப்பது உறுதி,” என்று தாய்லாந்து நிதி அமைச்சர் பிச்சாய் சன்யாவஜிரா நாடாளுமன்ற விவாதத்தின்போது கூறினார்.

குறிப்புச் சொற்கள்