ஹாங்காங்: ஹாங்காங் மீது சீனாவின் கட்டுப்பாடு நாளுக்கு நாள் இறுகி வருவதால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் பிரிட்டனுக்குத் தப்பியோடுகின்றனர்.
அவ்வாறு செல்பவர்கள், தங்களுடைய ஒய்வுகாலச் சேமிப்பு நிதியைக்கூட எடுப்பதில்லை. அதன் மதிப்பு 5.1 பில்லியன் டாலர் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக, ஹாங்காங்கிலிருந்து நீண்டகால அடிப்படையில் வெளியேறும் எவரும் ஹாங்காங்கின் கட்டாய ஓய்வூதிய சேமிப்பில் உள்ள பணத்தை எடுக்க முடியும்.
ஆனால், பிரிட்டிஷ் தேசிய (வெளிநாடு) அல்லது பிஎன்(ஓ) ஆகிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளியேறுபவர்கள், ஓய்வுக்கால வயதான 65க்கு முன்பு சேமிப்பிலிருந்து பணத்தை எடுக்க முடியாது என்று கட்டாய வருங்கால வைப்பு நிதித் திட்ட ஆணையம் கூறியுள்ளது.
பிரிட்டனுக்குச் செல்பவர்கள், அவர்களின் ஓய்வூதியப் பணத்தைப் பெற முடியாமல் போவதால் அதன் நிதிநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய சம்பவங்களில், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதால் அச்சமடைந்த ஒரு பெண்ணும் ஓய்வுக்காலச் சேமிப்பை எடுக்க முடியாமல் பிரிட்டனில் குடியேறினார். ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்த நடுத்தர வயது நபர் ஒருவரும், ‘இனி ஹாங்காங் திரும்ப மாட்டேன்’ என்று சூளுரைத்துவிட்டு தமது ஓய்வுக்காலச் சேமிப்பிலிருந்த 60,000 யுஎஸ் டாலருக்கு மேற்பட்ட தொகையை கைவிட்டுச் சென்றார்.
பிரிட்டனில் குடியேறிய மற்றொருவர், அங்கு வீடு வாங்குவதற்கு முன்பணம் செலுத்த முடியாமல் தவிக்கிறார். அவரது ஓய்வுக்காலச் சேமிப்பு ஹாங்காங்கில் சிக்கிக் கொண்டதே அதற்குக் காரணம்.
கடந்த மார்ச் மாதம் சீனாவின் அழுத்தம் காரணமாக ஹாங்காங் அரசாங்கம், அவசர வழியான ‘பிரிவு 23’ன் கீழ் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியது. இது, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாக வெளிநாட்டு அரசாங்கங்கள் குறைகூறின.
தொடர்புடைய செய்திகள்
“அதிகமானவர்கள் ஹாங்காங்கைவிட்டு வெளியேற முயற்சி செய்வதால் புதிய வீட்டுக்காக முன்னதாகவே பணத்தை மீட்டுக்கொள்ள விரும்புகின்றனர். ஆயினும், பலரால் பணத்தை எடுக்க முடிவதில்லை,” என்று ‘ஹாங்காங் கண்காணிப்பு’ என்ற பிரிட்டனைத் தளமாகக் கொண்டு செயல்படும் சமூகநல அமைப்பின் மேகன் கூ தெரிவித்தார்.
பிரிட்டனின் பிஎன்(ஓ) கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளியேறியவர்களும் 2021ஆண்டிலிருந்து சேமித்த 3.8 பில்லியன் டாலர் ஓய்வுக்கால சேமிப்பைக் கைவிட்டுள்ளனர்.
1997ல் சீனாவிடம் ஹாங்காங்கை ஒப்படைப்பதற்கு முன்பு ஹாங்காங்கில் பிறந்தவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பிரிட்டனில் குடியேறும் உரிமைக்காகவும் முழு பிரிட்டிஷ் குடியுரிமை பெறுவதற்காகவும் பிஎன்(ஒ) கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 2021ல் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியதால் இந்தப் பாதையை 140,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர்.

