ஜோகூரில் காவல்துறை வாகனம் மீது மோதிய கார்; சரமாரியாகச் சுட்ட அதிகாரிகள்

ஜோகூரில் காவல்துறை வாகனம் மீது மோதிய கார்; சரமாரியாகச் சுட்ட அதிகாரிகள்

1 mins read
a6d04dff-2708-40c8-98a3-2e4f89cafa4d
காரில் இருந்த மூவர் கைது செய்யப்பட்டனர். - கோப்புப் படம்: ஊடகம்

ஜோகூர் பாரு: காவல்துறை வாகனத்தின் மீது மோதிய காரை நோக்கி மலேசிய காவல்துறையினர் சரமாரியாகச் சுட்டனர்.

பாசிர் கூடாங்கின் தாமான் கோத்தா மாசாயில் ஜூலை 18ஆம் தேதி நிகழ்ந்த அந்தச் சம்பவத்தை மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி முகம்மது சொஹைமி விளக்கினார்.

காவல்துறை அதிகாரிகள் வீடமைப்பு வட்டாரம் ஒன்றில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது பிற்பகல் 12.20 மணிவாக்கில் மர்ம கார் ஒன்று புகுந்ததாக அவர் சொன்னார்.

“சோதனை நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது காவல்துறை வாகனம் ஒன்றை நோக்கி வந்த கார் அதனுடன் மோதியது. கடமையில் ஈடுபட்டு இருந்த காவல்துறை அதிகாரிகள் மீதும் அந்த கார் மோதி இருக்கும்.

“இருப்பினும், தற்காப்பு நடவடிக்கையாக காரை நோக்கி காவல்துறையினர் பலமுறை சுட்டனர்,” என்று வெள்ளிக்கிழமை (ஜூலை 19) வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

“பின்னர், காரில் இருந்த மூன்று சந்தேக நபர்களை காவல்துறை கைது செய்தது. அந்த மூவரும் ஏற்கெனவே இதற்கு முன்னர் குற்றங்களிலும் போதைப்பொருள் குற்றங்களிலும் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது.

“பிடிபட்டவர்கள் 24 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் போதைப்பொருள் உட்கொண்டு இருந்தது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

“விசாரணைக்கு உதவ 25 வயதுடைய மற்றொரு சந்தேக நபர் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி வருகிறோம்,” என்றும் அந்த அதிகாரி கூறினார்.

குறிப்புச் சொற்கள்