தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசமடையும் ஆர்ப்பாட்டங்கள்; ஊரடங்கு விதிக்க பங்ளாதேஷ் அரசு முடிவு

2 mins read
84af9444-6499-400d-82e5-5ff0a79a9423
அதிகாரிகளுடன் மோதிய மாணவர்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா: அரசாங்கப் பணிகளுக்கான இட ஒதுக்கீட்டுமுறையை எதிர்த்து பங்ளாதேஷில் கடந்த சில நாள்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், ஆர்ப்பாட்டம் அந்நாட்டில் உள்ள மேலும் பல இடங்களுக்குப் பரவியுள்ளது.

வன்முறைச் சம்பவங்கள் மோசமடைந்ததை அடுத்து, ஊரடங்கு விதிக்க பங்ளாதேஷ் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்று பிரதமர் ஷேக் ஹசினாவின் ஊடகச் செயலாளர் கூறியதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் நாடெங்கும் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளில் நிறுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க, பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாணவர்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஜூலை 19ஆம் தேதியன்று மூவர் மாண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியதாக சம்பவத்தை நேரில் கண்ட ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கூறினர்.

தலைநகர் டாக்காவில் பல இடங்களில் தீ மூண்டதாக அவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, பங்ளாதேஷில் தகவல்தொடர்பும் தடைபட்டுள்ளது. தொலைக்காட்சி ஒளிவழிகள் இயங்கவில்லை.

ஆர்ப்பாட்டங்களை முறியடிக்கும் நோக்கில் கைப்பேசி சேவைகளை அதிகாரிகள் முடக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், அதிகாரிகளை நோக்கி செங்கற்களை எறிந்ததாகவும் அறியப்படுகிறது.

பங்ளாதேஷில் 64 மாவட்டங்கள் உள்ளன.

வன்முறை காரணமாக ஜூலை 18ஆம் தேதியன்று பங்ளாதேஷின் 47 மாவட்டங்களில் 27 பேர் உயிரிழந்ததாகவும் 1,500 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 19ஆம் தேதி இரவு நிலவரப்படி மாண்டோர் எண்ணிக்கை 105ஆக அதிகரித்திருப்பதாக பங்ளாதேஷில் உள்ள மருத்துவமனைகள் தகவல் அளித்தன என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆனால், இந்தத் தகவலை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

மாண்டோர் எண்ணிக்கை குறித்து பங்ளாதேஷ் காவல்துறை அதிகாரபூர்வ அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 40க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் பங்ளாதேஷ் தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தது.

வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதும் காட்டுத் தீயைப் போல மிக வேகமாகப் பரவி வருவதாகவும் நிலைமைய மிகவும் ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகவும் அது எச்சரிக்கை விடுத்தது.

குறிப்புச் சொற்கள்