கோலாலம்பூர்: மலேசியாவின் 17வது மாமன்னராக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் சனிக்கிழமை (ஜூலை 20) காலை முடிசூடினார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்ற முடிசூட்டு விழாவில், மலேசியாவின் மற்ற மாநிலங்களின் சுல்தான்கள், மலேசியாவின் அரசியல் தலைவர்கள், ஆளுநர்கள், வெளிநாட்டுப் பிரமுகர்கள் உட்பட ஏறத்தாழ 700 பேர் கலந்துகொண்டனர்.
விழாவில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் பங்குகொண்டார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலேசிய மாமன்னர் அரியணை ஏறும் நிகழ்ச்சியில் சிங்கப்பூரை பிரதிநிதித்து ஒருவர் சென்றிருப்பது இதுவே முதல் முறை.
மலேசியாவுக்கு நான்கு நாள் பயணமாக ஜூலை 19லிருந்து 22வரை திரு லீ சியன் லூங் சென்றுள்ளார். மலேசியாவில் திரு லீ, மலேசியப் பிரதமரும் நிதியமைச்சருமான அன்வார் இப்ராகிமைச் சந்தித்து உரையாடுவார். அத்துடன், மலேசிய மன்னர்கள், அமைச்சர்கள் பலரையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய அரசாங்கத்தையும் மக்களையும் பிரதிநிதித்து அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மாமன்னர், அரசியார் ஆகியோர் முன்னிலையில் வாழ்த்துரை வழங்கினார்.
மாமன்னர் இப்ராகிம், தமது ஆட்சியின்கீழ் நாட்டில் உள்ள அனைவரும் நியாயமான முறையில் நடத்தப்படுவர் என்று உறுதி அளித்தார்.
தமது கடமைகளை மனசாட்சிக்கு உண்மையாக, நேர்மையான முறையில் செவ்வனே நிறைவேற்றயிருப்பதாக அவர் கூறினார்.
மலேசியாவின் இறையாண்மை பாதுகாக்கப்படும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
நாட்டின் நலனுக்குத் தாம் முக்கியத்துவம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.
“என் மீது நம்பிக்கை வைத்து என்னை மலேசியாவின் மாமன்னராக முடிசூட்டியுள்ள மற்ற மாவட்ட சுல்தான்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், மாமன்னர் என்கிற முறையில் நாட்டில் உள்ள பல்வேறு பிரிவினர்களைக் கருத்தில் கொண்டு எனது கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றுவேன்,” என்று முடிசூட்டு விழாவில் பேசிய மாமன்னர் இப்ராகிம் தெரிவித்தார்.
மலேசியர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்குத் தீர்வு காண அரசாங்கம் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
மலேசியா மேலும் மேம்பட்டு செல்வ செழிப்புடன் இருக்க அரசாங்கம் பாடுபட வேண்டும் என்று மாமன்னர் கூறினார்.
அத்துடன், மலேசியர்கள் ஒற்றுமையுடன், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
முடிசூட்டு விழாவில் கலந்துகொண்டதற்காக புருணை மன்னர் ஹசனல் போல்கியாவுக்கும் பஹ்ரேன் மன்னர் ஷேக் ஹமாட் பின் இசா அல் கலிஃபாவுக்கும் மாமன்னர் இப்ராகிம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.