தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘காஸா போர் நிறுத்த உடன்பாடுவெகு அருகில் உள்ளது’

2 mins read
8f4f198b-c3c2-4c81-8495-1929af43ddee
ஜூலை 19ஆம் தேதி இஸ்ரேலின் ஆகாயத் தாக்குதலில் நாசமடைந்த கட்டடத்தை பாலஸ்தீன அதிகாரிகள் பார்வையிட்டு சேதத்தை மதிப்பிடுகின்றனர். - படம்: இபிஏ

ஏஸ்பென்(கொலராடோ): அமெரிக்க வெளியுறவு அமைச்சரான ஆண்டனி பிளிங்கனும் தேசிய பாதுகாப்பு ஆலேசகருமான ஜேக் சல்லிவனும் காஸா வட்டாரத்தில் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும் போர் நிறுத்தம் ஏற்படவும் ஒப்பந்தம் மிகவும் நெருங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வாஷிங்டனுக்குச் செல்கிறார். அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவும் வேளையில் அவரது வருகைக்கு அமெரிக்க நிர்வாக அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

கொலராடோவில் நடைபெற்ற ஏஸ்பென் பாதுகாப்புக் கருத்தரங்கில் பிளிங்கன் பேசினார்.

அப்போது, போர் நிறுத்தத்திற்கான உடன்பாடு 9 மீட்டர் தொலைவில்தான் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சிறிது நேரம் கழித்து அதே மாநாட்டில் பேசிய திரு சல்லிவன், ஜூலை 24ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் திரு நெட்டயன்யாகு உரையாற்றுவதற்கு முன்பு போர் நிறுத்த உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.

வரும் வாரங்களில் உடன்பாட்டை எட்டுவதற்காக திரு நெட்டன்யாகுவுடனான சந்திப்பில் அதிபர் ஜோ பைடன் முழுக் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.

இதனிடையே, அதிபர் தேர்தலிலிருந்து விலக வேண்டும் என்று பைடனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நெட்டன்யாகுவுடன் உள்ள பதற்றமான உறவைச் சீர்செய்து தாம் மீண்டும் போட்டியிடுவதற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பைடன் எப்படிக் கையாள்வார் என்பது பற்றி திரு பைடனின் நெருங்கிய ஆலோசகர்கள் தெரிவிக்கவில்லை.

இதற்குப் பதிலாக உடன்பாடு எட்டுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உடன்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஹமாசுக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், காஸாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறி முழுமையான போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது ஹமாஸின் கோரிக்கையாக உள்ளது.

இதற்கிடையே, திரு பைடனின் உத்தேசக் கட்டமைப்புக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக திரு பிளிங்கன் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்