வாஷிங்டன்: அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் பொறுப்பில் இருந்து விலகுமாறு அதிபர் ஜோ பைடனுக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, தம்மைச் சுற்றி யாரும் இல்லாத சூழலில் தமது டெலவேர் கடற்கரை வீட்டில் திரு பைடன் தனிமையில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், திரு பைடனின் வயது மற்றும் உடல்நிலை கருதி அவர் சார்ந்திருக்கும் ஜனநாயகக் கட்சியினரே வேட்பாளர் பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
அந்தக் குரல்களில் ஆக முக்கியமானது முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவினுடையது. திரு பைடன் போட்டியில் இருந்து விலகுவது நல்லது என்று அவரும் கருத்துத் தெரிவித்து உள்ளார்.
ஆனால், முன்னாள் நாடாளுமன்ற நாயகர் திருவாட்டி நேன்சி பெலோசியும் அவரது பின்னணியில் திரு ஒபாமாவும் தமக்கு நெருக்குதல் ஏற்படுத்தி வருவதாக திரு பைடன் கருதுகிறார் என அண்மைய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திரு ஒபாமா அதிபராக இருந்தபோது திரு பைடன் துணை அதிபராக இருந்தார். திரு பைடனை அந்த நிலைக்கு உயர்த்தியவர் திரு ஒபாமா. குறிப்பாக, 2020 தேர்தலில் திரு பைடனுக்கு ஆதரவாக நின்றவர்கள் திருவாட்டி பெலோசி மற்றும் ஜனநாயகக் கட்சியின் செனட் சபை தலைவர் சக் ஷுமர்.
தற்போது அதே தலைவர்கள், அதாவது திரு ஒபாமா, திருவாட்டி பெலோசி, திரு ஷுமர் ஆகியோருடன் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸும் திரு பைடன் விலகக் குரல் கொடுத்து வருவதாக வெளிவரும் செய்திகளை திரு பைடன் கவனித்து வருகிறார்.
வேட்பாளர் காரணமாக நவம்பர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி படுதோல்வியைச் சந்திக்கும் என்று அவர்கள் அனைவரும் எச்சரித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவரை அவரது சொந்தக் கட்சியினரே விலகச் சொல்லி நெருக்குதல் அளித்து வருவது இதுவரை காணாத ஒன்று என்று கருதப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் திரு பைடனின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சொந்தக் கட்சி நண்பர்களே அவர் விலக வேண்டும் என்று அடுத்தடுத்து நெருக்குதல் அளித்து வருகின்றனர்.