டாக்கா: பங்ளாதேஷில் மாணவர் போராட்டத்தை ஒடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் நீட்டித்து உள்ளது.
அரசாங்கத்தின் வேலை ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து மாணவர்கள் தலைமையில் பங்ளாதேஷில் நடந்த போராட்டத்தில் குறைந்தபட்சம் 114 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் இருந்து பங்ளாதேஷை விடுவித்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடிய குடும்பங்களுக்கு அரசாங்க வேலையில் 30 விழுக்காடு ஒதுக்கப்பட வேண்டும் என்று ஒதுக்கீட்டுக் கொள்கையில் கூறப்பட்டு உள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் கடந்த 2018ஆம் ஆண்டு அந்தக் கொள்கையை ரத்து செய்தது.
ஆயினும், கடந்த மாதம் நீதிமன்றம் தலையிட்டு அதனை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தியது.
அதனை மாணவர்கள் எதிர்த்து வருகிறார்கள். வன்முறை மேலும் பரவாமல் தடுக்க அங்கு கடந்த வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
அதனை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) பிற்பகல் 3 மணி வரை அரசாங்கம் நீட்டித்து உள்ளது.
இதற்கிடையே, அரசாங்கத்தின் மேல்முறையீட்டை ஏற்று ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
தொடர்புடைய செய்திகள்
அவ்விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 7ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று முன்னர் அறிவித்து இருந்த உச்ச நீதிமன்றம், அதனை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றிவிட்டது.