தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய நஜிப்-இர்வான்; நீதிமன்றம் ஏற்க மறுப்பு

2 mins read
344739a3-ec71-4dcf-a85a-5a89c53b5f7d
ஐபிஐசிக்குச் செலுத்தப்பட இருந்த பொது நிதியைக் கையாடியதாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், மலேசியாவின் தேசிய கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகார் அப்துல்லா ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. - படங்கள்: மலேசிய ஊடகம்

கோலாலம்பூர்: அனைத்துலக பெட்ரோலிய முதலீட்டு நிறுவனத்திடம் (ஐபிஐசி) வழங்கப்பட இருந்த 6.6 பில்லியன் ரிங்கிட் தொடர்பான நம்பிக்கை துரோக வழக்கிலிருந்து தங்களைத் தற்காலிகமாக விடுவிக்குமாறு மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கும் மலேசியாவின் முன்னாள் தேசிய கருவூல தலைமைச் செயலாளர் இர்வான் செரிகார் அப்துல்லாவும் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

அவர்கள் இருவரின் விண்ணப்பங்களையும் மலேசிய உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்குத் தயாராகும்படி இருவரிடமும் நீதிபதி ஜமில் உசேன் தெரிவித்தார்.

இந்த வழக்கில் நஜிப்பை வழக்கறிஞர் ஃபர்ஹான் ஷஃபியும் இர்வானை வழக்கறிஞர் கே. குமரேந்திரனும் பிரதிநிதிக்கின்றனர்.

வழக்கு விசாரணையில் பயன்படுத்தப்பட இருக்கும் ஆவணங்களை அரசாங்க வழக்கறிஞர்கள் தங்களிடம் இன்னும் முழுமையாக வழங்கவில்லை என்று தற்காப்பு வழக்கறிஞர்கள் இருவரும் கூறினர்.

ஆவணங்கள் தயாரானதும் நஜிப் மற்றும் இர்வான் மீது அரசாங்க வழக்கறிஞர்கள் மீண்டும் குற்றம் சுமத்தலாம் என்று திரு குமரேந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், வழக்கு விசாரணையைத் தொடங்க தயாராக இருப்பதாக துணை அரசாங்க வழக்கறிஞர் சைஃபுதீன் ஹஷிம் முசாய்மி கூறினார்.

ஆனால், அனைத்து ஆவணங்களும் கிடைக்காமல் வழக்கு விசாரணைக்குத் தங்களால் தயாராக முடியாது என்று திரு குமரேந்திரன் நீதிமன்றத்திடம் முறையிட்டார்.

வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கக் கோரி நஜிப்பும் இர்வானும் விண்ணப்பம் செய்திருப்பது இதுவே இரண்டாவது முறை.

முதல்முறையாக அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தபோது அதை 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்தது.

ஐபிஐசிக்குச் செலுத்தப்பட இருந்த பொது நிதியைக் கையாடியதாக நஜிப் மற்றும் இர்வான் மீது 2018ஆம் ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டது.

ஐபிஐசி அபு தாபிக்குச் சொந்தமான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்