வாஷிங்டன்: வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிட 59 வயது கமலா ஹாரிசுக்கு அக்கட்சி பிரமுகர்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைத்துள்ளது.
ஜனநாயகக் கட்சியினரை ஒன்றிணைக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்ய இருப்பதாக அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சூளுரைத்துள்ளார்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப்பைத் தோற்கடித்து வெற்றி பெறுவதே இலக்கு என்றார் அவர்.
அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் ஜூலை 21 தேதி அறிவித்தார்.
தமக்குப் பதிலாக ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்து தேர்தலில் களமிறங்க கமலா ஹாரிசை அவர் முன்மொழிந்தார்.
இதையடுத்து, கமலா ஹாரிசுக்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரமுகர்களிடமிருந்து எவ்வித எதிர்ப்புக் குரல்களும் எழவில்லை.
மாறாக, அக்கட்சியைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கமலா ஹாரிசுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
அவர்களில் கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், இலினோய் ஆளுநர் ஜேபி பிரிட்ஸ்கர், மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மர் ஆகியோர் அடங்குவர்.
தொடர்புடைய செய்திகள்
பைடனுக்குப் பதிலாக இந்த மூவரில் ஒருவர் ஜனநாயகக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என்று முதலில் பேசப்பட்டது.
பைடன் தேர்தலிலிருந்து விலக உதவியதாகக் கூறப்படும் முன்னாள் நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசி, கமலா ஹாரிசுக்குத் தமது ஆதரவை ஜூலை 22ஆம் தேதியன்று தெரிவித்தார்.
பைடனின் தேர்தல் பிரசாரத்துக்காக திரட்டப்பட்ட 96 மில்லியன் அமெரிக்க டாலர் (S$129 மில்லியன்) இனி கமலா ஹாரிசுக்காகப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதாக கமலா ஹாரிஸ் அறிவித்து 24 மணி நேரத்துக்குள் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் 81 மில்லியன் அமெரிக்க டாலர் சேர்க்கப்பட்டது.