பெட்டாலிங் ஜெயா: ஜூலை 20ஆம் தேதியன்று மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் இஸ்கந்தர் புத்ரி வட்டாரத்தில் உள்ள கடைத்தொகுதியில் காணாமல் போன 6 வயது சிறுமி மீட்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 23 அதிகாலை 4 மணி அளவில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பாத்தாங் காலி நகரில், குறைந்த விலை ஹோட்டல் ஒன்றில் 6 வயது ஆல்பர்ட்டின் லியோ ஜியா ஹுவி மீட்கப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.
அச்சிறுமியுடன் 31 வயது மலேசிய ஆடவர் ஒருவர் இருந்ததாக செய்தியாளர் கூட்டத்தில் திரு குமார் கூறினார்.
மருத்துவப் பரிசோதனைக்காக லியோ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“சிறுமி பாதுகாப்பாக உள்ளார். சந்தேகப் பேர்வழி ஜோகூருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும்,” என்று திரு குமார் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 22ஆம் தேதியன்று ஜோகூரின் இஸ்கந்தர் புத்ரி பகுதியில் இரண்டு ஆடவர்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமும் விசாரணை நடத்தப்படுவதாக திரு குமார் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஐவருக்கும் சிறுமிக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
கடத்தல், பலவந்தமாக அடைத்து வைத்தல் ஆகிய குற்றங்களின்கீழ் விசாரணை நடைபெறுவதாக திரு குமார் கூறினார்.
இஸ்கந்தர் புத்ரியில் உள்ள இக்கோ கெலேரியா கடைத்தொகுதியில் ‘பொன் ஒடோரி’ நிகழ்வின்போது லியோ காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது.
அந்த நிகழ்வில் லியோவின் தாயார் குளிர்பானம் விற்றுக்கொண்டிருந்தபோது சிறுமி மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறுமி குறித்து தகவல் கிடைத்தால் அதை உடனடியாக ஜோகூர் காவல்துறையினரிடம் தெரிவிக்கும்படி அம்மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கிடையே, சிலாங்கூரில் உள்ள மருத்துவமனையில் லியோ சிகிச்சை பெற்று வருவதாக ஜோகூர் மாநில சுகாதார, சுற்றுப்புறக் குழுத் தலைவர் லிங் தியேன் சூன் ஜூலை 23ஆம் தேதியன்று தெரிவித்தார்.
இந்தப் பயங்கரமான, கசப்பான அனுபவத்திலிருந்து மீண்டு வர எந்த ஒரு தொந்தரவுமின்றி சிறிது காலம் குடும்பமாக, தனிமையில் இருக்க விரும்புவதாக லியோவின் குடும்பம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
காவல்துறையின் துரிதமான செயலுக்கும் இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் கொண்டிருந்த அக்கறைக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டதாக அவர் கூறினார்.
லியோவை 48 மணி நேரத்துக்குள் மீட்ட மலேசியக் காவல்துறையின் நிபுணத்துவத்தையும் ஆற்றலையும் திரு லிங் வெகுவாகப் பாராட்டினார்.
இனம், சமயம் பேதமின்றி சிறுமியைத் தேட உதவ முன்வந்த அனைத்து மலேசியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

