யுஏஇ: போராட்டம் நடத்திய வெளிநாட்டினர் 57 பேருக்குச் சிறை

1 mins read
f8d68c9a-a583-43cb-afa7-e85a01a5f0b6
மக்கள்தொகையில் 90% வெளிநாட்டினரைக் கொண்டுள்ள ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

அபுதாபி: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) தங்களது சொந்த நாட்டு அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய பங்ளாதேஷியர் 57 பேருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 19) யுஏஇ நாட்டின் பல்வேறு தெருக்களில் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி, பங்ளாதேஷியர் மூவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 53 பேருக்கு 10 ஆண்டுச் சிறையும் ஒருவருக்கு 11 ஆண்டுச் சிறையும் விதிக்கப்பட்டுள்ளதாக யுஏஇ அரசாங்கச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட பங்ளாதேஷியருக்கு ஆதரவாக வாதாட நீதிமன்றமே தற்காப்பு வழக்கறிஞர் ஒருவரை நியமித்தது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த விசாரணையின்போது, குற்றவியல் நோக்கத்துடன் அந்த பங்ளாதேஷியர் ஒன்றுகூடவில்லை என்றும் அவர்கள் மீதான குற்றச்சாட்டிற்குப் போதிய சான்றுகள் இல்லை என்றும் தற்காப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனிடையே, தனது மண்ணில் போராட்டம் நடத்தியதற்காகவே கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறி, யுஏஇ அரசிற்கு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

யுஏஇ நாட்டில் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது. அந்நாட்டின் மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினர் வெளிநாட்டினர். அங்கு அதிகமாக இருக்கும் வெளிநாட்டினரில் பங்ளாதேஷியர் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

பங்ளாதேஷில் அரசாங்கப் பணிகளில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து கடந்த சில வாரங்களாக மாணவர்கள் தலைமையில் பெரும் போராட்டங்களும் வன்முறையும் வெடித்தன. அதில் கிட்டத்தட்ட 160 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்; 500க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்