அமெரிக்க எல்லையை நோக்கிசாரை சாரையாகச் செல்லும் 3,000 குடியேறிகள்

1 mins read
96ff841a-29ef-49d0-a33a-e3448ee32a2c
அமெரிக்க எல்லையை நோக்கி கூட்டங் கூட்டமாகச் செல்லும் குடியேறிகள். - படம்: ராய்ட்டர்ஸ்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் தெற்குப் பகுதியிலிருந்து அமெரிக்க எல்லையை நோக்கி ஏறத்தாழ 3,000 பேர் ஒன்றாக நடந்து செல்கின்றனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, கையில் குழந்தைகளுடன் அமெரிக்காவை எப்படியும் சென்றடைந்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் அவர்கள் உள்ளனர்.

இவர்களைப் போன்ற குடியேறிகள் தொடர்பாக அமெரிக்காவின் அரசியல் வட்டாரங்களில் மிகக் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன.

நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியேறிகள் விவகாரம் முக்கிய இடம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அமெரிக்காவை யார் ஆட்சி செய்தாலும் எங்கள் போராட்டம் தொடரும். அமெரிக்காவை அடைவதே எங்கள் இலக்கு. எங்கள் கனவை நனவாக்க போராடுவோம்,” என்று ஹோண்டுராசை சேர்ந்த லெய்வி கால்னா தெரிவித்தார்.

அண்மைய ஆண்டுகளில் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவை நோக்கிச் செல்லும் ஆயிரக்கணக்கான குடியேறிகள் இதுபோன்று கூட்டங் கூட்டமாக நடந்து செல்கின்றனர்.

கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கடத்தல் போன்றவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்கள் இந்த உத்தியைக் கடைப்பிடிக்கின்றனர்.

இதுபோன்று கூட்டங் கூட்டமாகப் பயணம் செய்வது பாதுகாப்பைத் தருகிறது என்று அமெரிக்காவை நோக்கிச் செல்பவர்களில் ஒருவரான வெனிசுவேலாவைச் சேர்ந்த யோய்சி கூறினார்.

அமெரிக்காவை நோக்கி கூட்டங் கூட்டமாகப் பயணம் மேற்கொள்பவர்களில் பெரும்பாலானோர் வெனிசுவேலாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் சிறுவர்கள் பலர் இருப்பதாகவும் அண்மைக் காலமாக அவர்களது எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்