தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நேப்பாளத்தில் தீப்பிடித்து எரிந்த விமானம்; 18 பேர் கருகி பலி

2 mins read
325ebc68-20e8-4252-bc86-28f9ee262def
தீயில் கருகிக் கிடக்கும் விமானம். - படம்: இபிஏ

காத்மாண்டு: நேப்பாளத்தின் காத்மாண்டில் ஜூலை 24ஆம் தேதி பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் சறுக்கி தீப்பிடித்ததில் அதில் இருந்த 18 பேரும் கொல்லப்பட்டனர்.

விமானி மட்டும் எரியும் விமானத்திலிருந்து மீட்கப்பட்டார் என்று அந்நாட்டின் காவல்துறை தெரிவித்தது.

நேப்பாளத்தில் விமானப் பாதுகாப்பு வலுவாக இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் பல இலகுரக, ஹெலிகாப்டர் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

ஜூலை 24ஆம் தேதி பரிசோதனைக்காக சௌரியா ஏர்லைன்ஸ் விமானம் பறந்து சென்றது. அதில் இரண்டு விமான ஊழியர்களும் 17 நிறுவன ஊழியர்களும் பயணம் செய்தனர் என்று நேப்பாள காவல்துறை பேச்சாளர் டான் பகதூர் கார்கி ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதகாவும் அவர் கூறினார்.

“வெளிநாட்டவர் உட்பட 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விரைவில் உடற்கூறு ஆய்வுகள் செய்யப்படும்,” என்றார் அவர்.

விபத்துக்குள்ளான விமானம் தொழில்நுட்ப அல்லது பராமரிப்புக்காக சோதனையிடப் பட்டிருக்கலாம் என்று நேப்பாள சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் கியானேந்திரா புஹுல் தெரிவித்துள்ளார்.

இறந்த ஒரே வெளிநாட்டவர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

நேப்பாள ராணுவம் பகிர்ந்துகொண்ட படங்களில் விமானத்தின் வால் பகுதியைத் தவிர மற்ற பகுதிகள் சுக்குநூறாக உடைந்து கருகிக் கிடக்கின்றன.

விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அருகே டயர் கடை வைத்துள்ள ராம் குமார் கே.சி, தரையில் மோதியதும் விமானம் தீப்பிடித்து எரிந்ததாக ஏஎஃப்பியிடம் கூறினார்.

“நாங்கள் ஓடுவதற்கு தயாராக இருந்தோம். மறுபடியும் வெடிப்பு ஏற்பட்டது. நாங்கள் உடனே ஓடிவிட்டோம்,” என்று அந்த 48 வயது கடைக்காரர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்