அவதூறு பரப்பிய கம்போடிய எதிர்க்கட்சித் தலைவருக்கு $1.5 மில்லியன் அபராதம்

1 mins read
cff5982e-3f55-4e59-8a52-cc246ae75f3d
தியவ் வனோலுக்கு $1.5 மில்லியன் அபராதம் விதித்து கம்போடிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. - படம்: பிக்சாபே

நோம் பென்: கம்போடியாவில் ஜனநாயகத்தின் நிலை குறித்து வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் கூறிய கருத்துகளுக்காக, எதிர்க்கட்சித் தலைவர் தியவ் வனோல் மீதான அவதூறு குற்றச்சாட்டு நிரூபணமானது.

அதைத் தொடர்ந்து அவருக்கு $1.5 மில்லியன் (அமெரிக்க டாலர்) அபராதம் விதித்து கம்போடிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது.

‘கேன்டல் லைட்’ கட்சித் தலைவரான வனோல், பிப்ரவரியில் நிக்கெய் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், பிரதமர் ஹுன் மானெட்டின் ஆட்சியின்கீழ் கம்போடியாவில் ஜனநாயகம் மோசமடைந்ததாகக் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டின் பொதுத் தேர்தலில் போட்டியிட கேன்டல் லைட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், ஹுன் மானெட்டின் கம்போடிய மக்கள் கட்சிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.

தற்போது வனோல் கம்போடியாவில் இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளை வனோலின் வழக்கறிஞர் ஏற்கவில்லை.

குறிப்புச் சொற்கள்