பாரிஸ்: உலகின் ஒரு விழுக்காடு பணக்காரர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் 42 டிரில்லியன் அமெரிக்க டாலரை சம்பாதித்துள்ளனர் என்று ஆக்ஸ்ஃபாம் வியாழக்கிழமை (ஜூலை 25) அன்று தெரிவித்தது.
உலகில் உள்ள பாதி ஏழை மக்களிடம் உள்ள பணத்தைவிட 36 மடங்கு பணம் செல்வந்தர்களிடம் உள்ளது.
விரைவில் பிரேசிலில் ஜி20 மாநாடு நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பணக்காரர்களுக்கு வரி விதிப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.
ஆனால், பணம் குவிந்தாலும் பெரும் பணக்காரர்கள் செலுத்தும் வரி இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால் உலகின் எஞ்சிய பகுதிகளுடன் ஏற்றத் தாழ்வு அதிகரிக்கும் என்று அந்த அரசாங்க சார்பற்ற அமைப்பு தெரிவித்தது.
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 விழுக்காட்டை பிரதிநிதிக்கும் நாடுகளின் அமைப்பான ‘ஜி20’க்கு இம்முறை பிரேசில் தலைமை வகிக்கிறது.
இந்நிலையில், பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிப்பதில் அனைத்துலக ஒத்துழைப்பைப் பெறுவதில் பிரேசில் மும்முரமாக உள்ளது.
ரியோ டி ஜெனிரோவில் இவ்வாரம் நடைபெறும் உச்சநிலை மாநாட்டில், பெரும் பணக்காரர்கள் மீதான வரிகளை உயர்த்துவதற்கான வழிகளில் ஜி20 நிதி அமைச்சர்கள் முன்னேற்றம் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

