மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டின் போதைப்பொருள் கும்பல் தலைவரான இஸ்மாயில் ‘எல் மாயோ’ ஸாம்படா கார்சியாவும் அவரது முன்னாள் பங்காளி ஜோக்குவின் ‘எல் சாப்போ’ குஸ்மனின் மகனும் அமெரிக்காவில் ஜூலை 25ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெக்சஸ் மாநிலத்தின் எல் பாசோவில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித் துறை தெரிவித்தது.
உலக அளவில் மிக மோசமானதாகவும் வலுவானதாகவும் கருதப்படும் போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளில் ஒன்றான சினலோவா கார்டெலின் கூடுதல் தலைவர்கள் என்று கூறப்படும் இருவரைத் தடுத்து வைத்துள்ளதாக அது குறிப்பிட்டது.
ஸாம்படாவும் எல் சாப்போவின் மகனான ஜோக்குவின் குஸ்மன் லோபெசும், போதைப்பொருள் கடத்தல் அமைப்பின் குற்றச்செயல்கள் பலவற்றின் தொடர்பில் அமெரிக்காவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
குஸ்மன் லோபெஸ் கைது செய்யப்பட்ட விவரத்தை அமெரிக்க நீதித் துறை வெளியிடுவதற்கு முன்பாகவே ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டது.
தனியார் விமானம் ஒன்றில் வந்திறங்கிய ஸாம்படாவும் குஸ்மன் லோபெசும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் இருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டது.
மெக்சிகோ வரலாற்றில் ஆக வலுவான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஸாம்படா, எல் சாப்போவுடன் இணைந்து சினலோவா கார்டெல் அமைப்பைத் தொடங்கியவர்.
தொடர்புடைய செய்திகள்
2017ல் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட எல் சாப்போ உச்சப் பாதுகாப்பு நிலவும் சிறையில் ஆயுள் தண்டனையை நிறைவேற்றி வருகிறார். தந்தை அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட பிறகு அவரது குற்றச்செயல் அமைப்பை எல் சாப்போவின் நான்கு மகன்களும் தொடர்ந்து நடத்துவதாகக் கூறப்படுகிறது.