ஜோகூர் பாரு: ஜோகூரில் சில நாள்களுக்கு முன்பு காணாமல்போன ஆறு வயது சிறுமி பத்திரமாக வீடு திரும்பியிருந்தாலும் அவர் தனியாக இருக்க விரும்பவில்லை. குடும்பத்தினர் யாராவது தன்னுடன் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இம்மாதம் 20ஆம் தேதி மாலை ஜோகூரின் இஸ்கந்தர் புத்ரியிலிருந்து அவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் ஜூலை 23ஆம் தேதி காலை சிலாங்கூரின் பாத்தாங் காலியில் உள்ள ஒரு மலிவுக் கட்டண ஹோட்டல் அறையில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசியாவின் ‘த ஸ்டார்’ வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
செலாயாங் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் சிறுமிக்கு உடல்ரீதியாக காயம் இல்லை என்று அவளது தாயார் கூறியிருக்கிறார்.
“இருந்தாலும் சிறுமியின் மனநிலை இன்னமும் பாதிக்கப்பட்டுள்ளது,” என்றார் மலேசிய சீனர் சங்கத்தின் இளையர் பிரிவுத் தலைவரான லிங் டியான் சூன்.
ஜூலை 25ஆம் தேதி சிறுமியின் வீட்டுக்குச் சென்றபோது அவரது தாயார் தம்மிடம் கூறியதை அவர் ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டார்.
ஒரு சமயம் இயல்பாக இருப்பதாகவும் ஒரு சமயம் பயத்துடன் இருப்பதாகவும் அவரது தாயார் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தன்னைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் தன்னுடன் தாயார் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் சிறுமி கூறியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
இதனால் சிறுமியின் உடன்பிறந்தவர்கள் அல்லது உறவினர்கள் யாராவது ஒருவர் அவளுடன் எப்போதும் இருப்பதை குடும்பத்தினர் உறுதி செய்கின்றனர்.
பாத்தாங் காலியில் உள்ள மலிவுக் கட்டண ஹோட்டல் அறையை அடைவதற்கு முன்பு பல இடங்களுக்கு தான் அழைத்துச் செல்லப்பட்டதை சிறுமி நினைவுகூர்ந்ததாக ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச் சூழல் குழுவின் தலைவருமான திரு லிங் தெரிவித்தார்.
சிறுமி இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாததால் தனக்கு என்ன நடந்தது என்பதை இன்னும் முழுமையாகக் கூறவில்லை என்று அவரது 37 வயது தாயார் கூறியுள்ளார்.
இதற்கிடையே சிறுமியின் மனநிலையை மதிப்பிடுவதற்காக குடும்பத்தினர், சுல்தானா அமினா மருத்துவமனையில் மனோவியல் மருத்துவரைச் சந்திக்க முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த மதிப்பீட்டுக்குப் பிறகு தேவையான மருத்துவ சிகிச்சைகள் குறித்து நிர்ணயிக்கப்படும் என்று திரு லிங் மேலும் கூறினார்.
சிறுமியின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் ஜோகூரின் குலுவாங்கில் வசித்தனர்.
திரு லிங், சிறுமிக்கு எழுதுபொருள், பள்ளிக்கு எடுத்துச் செல்லும் புத்தகப் பை உள்ளிட்ட பரிசு பொருள்களை வழங்கினார்.
அவற்றை பெற்றுக் கொண்ட சிறுமி மகிழ்ச்சியுடன் தாயாரிடம் காட்டினார்.
சிறுமியைப் பற்றி கவலையடைந்த ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸியும் அவருக்கு விருப்பமான கேலிச்சித்திர கதாபாத்திர பொம்மைகளை சிறுமிக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறார்.
இஸ்கந்தர் புத்ரியில் நடைபெற்ற ‘போன் ஓடோரி’ ஜப்பானிய கலை விழாவில் சிறுமி காணாமல் போனார். இது, நாடு முழுவதும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
சிறுமியைப் பற்றி தகவலறிந்தால் பகிர்ந்துகொள்ளும்படி பலர் சமூக ஊடகங்களில் கேட்டுக் கொண்டனர்.
இவ்வாரம் முற்பகுதியில் சிறுமி காணாமல்போன சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்தனர். இவர்களில் மூவர் ஆண்கள், இரண்டு பேர் பெண்கள். இவர்களில், மலிவுக் கட்டண ஹோட்டல் அறையில் இருந்த 31 வயது ஆடவரும் அடங்குவார்.
நால்வரும் ஜூலை 26ஆம் தேதி வரை காவல்துறை காவலில் வைக்கப்படுவார்கள். 31 வயது சந்தேக நபர் ஜூலை 29ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்.