ஜோகூர்: ஜோகூரில் உள்ள கார் திருட்டுக் கும்பல், ஆடம்பரக் கார்களுக்கு குறி வைக்கிறது. அவர்களுக்குத் தேவை முப்பது நொடிகள். அதற்குள் அவர்கள் காரோடு சென்றுவிடுவார்கள். அப்படி கடத்தப்படும் கார்கள் அண்டை நாடுகளுக்கு விற்கப்படுவதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்தது.
எச்சரிக்கை ஒலி எழுப்புவதையும் ஜிபிஎஸ் முறையையும் தடுத்து காரை செயல்பட வைக்கும் அதிநவீன சாதனத்தை திருட்டுக் கும்பல் பயன்படுத்துகிறது என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம். குமார் வெள்ளிக் கிழமை அன்று (ஜூலை 25) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கார், மோட்டார்சைக்கிள், வாகன உதிரி பாகங்களுக்கு குறி வைக்கும் இத்தகைய கும்பலில் பல, ஒரு மாதம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் நசுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஜூன் 21 முதல் ஜூலை 21 வரை ஜோகூர் மாவட்டத்தில் உள்ள பல காவல்துறை அதிகாரிகளுடன் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
கார் பழுதுபார்க்கும் இடங்கள், வாகன உதிரி பாகங்களை விற்கும் இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் 110க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய வயது 16 முதல் 59 வரையிலாகும்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் போதைப் பொருள் தொடர்பான குற்றச்செயல்களுக்காக தேடப்பட்டவர்கள். அவர்களில் 24க்கும் மேற்பட்டவர்கள் ஆடம்பரக் கார்கள், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட திருட்டுகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இத்தகைய திருடர்கள், இருவர் அல்லது மூவர் கொண்ட குழுக்களாகச் செயல்படுகின்றனர். வாடகைக் காரைப் பயன்படுத்தி இவர்கள், கடைத் தொகுதிகளில் உள்ள கார்ப்பேட்டைகளையும் பாதுகாப்பு இல்லாத குடியிருப்புப் பகுதிகளையும் நோட்டம் பார்க்கின்றனர்.
அப்படி, திருடப்பட்ட கார்கள் நிலம் வழியாக அண்டை நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. அங்குள்ள சந்தையில் ஒரு வாகனத்துக்கு 40,000 (S$11,520) ரிங்கிட் வரை கிடைக்கிறது என்று நாடுகளின் பெயரை வெளியிடாமல் திரு குமார் தெரிவித்தார்.

