நான் மாறவில்லை: டிரம்ப்

நான் மாறவில்லை: டிரம்ப்

2 mins read
37469ef2-683a-4c2b-83df-7d90b6c05244
மினசோட்டா செயின்ட் கிளவுட் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டோனல்ட் டிரம்ப், கமலா ஹாரிஸின் சிரிப்பையும் போக்கையும் கிண்டல் செய்தார். - படம்: ஏஏஃப்பி

செயின்ட் கிளவுட் (மினசோட்டா): குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டோனால்ட் டிரம்ப், தான் மாறவில்லை என்று கூறியுள்ளார்.

ஜூலை 27ஆம் தேதி இரவு மினசோட்டாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார்.

“அவர்கள் எல்லாரும் நான் மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் மாறிவிட்டார். அவரை ஏதோ பாதித்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் நான் மாறவில்லை. மோசமாகியிருக்கலாம்,” என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார்.

சில வாரங்களுக்கு முன்பு திரு டிரம்ப் கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார். அதன் பிறகு அவர் மாறிவிட்டதாக எதிர்தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஜனநாயகக் கட்சியில் பைடனுக்குப் பதிலாக களமிறக்கப்பட்டுள்ள அக்கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிசை அவர் கடுமையாக தமது உரையில் விமர்சித்தார்.

ஏறக்குறைய 90 நிமிடங்கள் நீடித்த உரையில், கமலா ஹாரிசை ‘தீயவர்’ எனக் குறிப்பிட்டு அவரது சிரிப்பையும் போக்கையும் டிரம்ப் கிண்டல் செய்தார்.

பொதுப் பாதுகாப்பு குறித்த திருமதி ஹாரிஸின் கருத்துகளைத் தாக்குவதற்கு டிரம்ப் கணிசமான நேரத்தை எடுத்துக் கொண்டார்.

முன்னதாக டெலவேர் மாநிலத்தின் வில்மிங்டன் நகரில் உள்ள பிரசாரக் கூட்டத்தில் பேசிய திருவாட்டி ஹாரிஸ், நவம்பர் “தேர்தலில் நாம் வெல்லப்போகிறோம்” என்று புன்னகையுடன் கூறினார்.

துணை அதிபர் பொறுப்புக்கு வரும் முன்னர் கலிஃபோர்னியாவில் அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞராக தாம் பணியாற்றியபோது எல்லாவிதமானக் குற்றவாளிகளையும் தாம் கண்டதாக அவர் தெரிவித்தார்.

“பெண்களை வேட்டையாடக்கூடியவர்கள், பயனீட்டாளர்களிடம் மோசடி செய்யக்கூடியவர்கள். சொந்த நலனுக்காக விதிகளை மீறி ஏமாற்றக்கூடியவர்கள்.

டோனல்ட் டிரம்ப் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியும் என்று நான் கூறும்போது அது எதற்காக என்று நீங்கள் கவனிக்க வேண்டும்,” என்று திருவாட்டி ஹாரிஸ் பலத்த கைதட்டல்களுக்கு இடையே பேசியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
டோனல்ட் டிரம்ப்கமலா ஹாரிஸ்அதிபர்