வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடப் போகிறார் என்று கடந்த வாரம் செய்தி வெளியான பிறகு US$200 மில்லியன் (S$268 மில்லியன்) நன்கொடை அவர் மூலம் ஜனநாயகக் கட்சிக்குத் திரண்டு உள்ளது.
அத்துடன், ஒரே வாரத்தில் புதிதாக 170,000 தொண்டூழியர்கள் திருவாட்டி கமலா ஹாரிசுக்கு ஆதரவாக வேலை செய்ய சேர்ந்துள்ளனர்.
நவம்பர் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக ஜூலை 21ஆம் தேதி அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
அத்துடன், டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட துணை அதிபர் கமலா ஹாரிசுக்குத் தாம் ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், திருவாட்டி கமலா ஹாரிசின் உதவி பிரசார மேலாளர் ராப் ஃபிளாஹார்டி தமது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
“நாம் பணியாற்றத் தொடங்கிய வாரத்தில் கமலா ஹாரிஸ் US$200 மில்லியன் நன்கொடையைத் திரட்டி உள்ளார். அந்தத் தொகையில் 66 விழுக்காடு புதியவர்களிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது. மேலும், 170,000 பேர் புதிய தொண்டூழியர்களாகப் பதிவு செய்து உள்ளனர்,” என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக பலர் ஆதரிக்கத் தொடங்கியதும், அமெரிக்காவின் தேர்தல் களம் தலைகீழாக மாறியுள்ளது
டிரம்ப்புக்கு எவ்வளவு?
முன்னதாக, ஏப்ரல் முதல் ஜூன் வரை US$442.8 மில்லியன் தங்களுக்கு நன்கொடை வழங்கப்பட்டதாக ஜூலை மாதத் தொடக்கத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப்பின் பிரசாரக் குழு தெரிவித்தது.

