கோலாலம்பூர்: சிங்கப்பூருக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் ஜூலை 19ஆம் தேதியன்று மோதிக்கொண்ட இரண்டு பெரிய எண்ணெய்க் கப்பல்கள், மலேசியக் கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ளதாக மலேசிய கடற்துறை ஜூலை 30ஆம் தேதியன்று தெரிவித்தது.
சிங்கப்பூர் கொடியேந்திய ‘ஹாவ்னியா நைல்’, பிரின்சிப் கொடியேந்திய ‘சிரேஸ் 1’ ஆகிய கப்பல்கள் மோதிக்கொண்டதை அடுத்து, அவை தீப்பிடித்து எரிந்தன.
இந்தச் சம்பவம் சிங்கப்பூருக்குச் சொந்தமான பெட்ரா பிராங்கா தீவுக்கு வடகிழக்குத் திசையில், 55 கிலோ மீட்டர் தூரத்தில் நிகழ்ந்தது.
விபத்து நிகழ்ந்தபோது ‘ஹாவ்னியா நைல்’ கப்பலில் எளிதில் தீப்பிடித்துக்கொள்ளக்கூடிய ‘நாஃப்தா’ ரசாயனம் அதிக அளவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கப்பலில் ‘நாஃப்தா’ ரசாயனம் இன்னும் இருப்பதாகத் மலேசியக் கடற்துறை தலைமை இயக்குநர் கேப்டன் முகம்மது ஹலிம் அகமது தெரிவித்தார்.
எனவே, ஆபத்தான கட்டத்தை இன்னும் தாண்டவில்லை என்றார் அவர்.
அந்த எண்ணெய்க் கப்பல் தீக்கு இரையாகியிருப்பதாகவும் அது நிலைகுலைந்து காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆனால் அதில் இருக்கும் ‘நாஃப்தா’ ரசாயனம் கடலில் கசியவில்லை என்றார் கேப்டன் முகம்மது ஹலிம்.
தொடர்புடைய செய்திகள்
கப்பல் கடலில் மூழ்காதிருக்கவும் அதைப் பாதுகாப்பான இடத்துக்கு இழுத்துச் செல்வதற்கும் முன்னுரிமை தரப்படுவதாக அவர் கூறினார்.