ஜோகூர் பாரு: ‘கிரேட்டர் ஜோகூர் பாரு’ திட்டத்தின் ஓர் அங்கமாக ஜோகூர் பாருவில் செயற்கை நுண்ணறிவுத் திறன்கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
2030ஆம் ஆண்டுக்குள் நகரை மேலும் பாதுகாப்பான, திறன்மிக்க வாழ்விடமாக மாற்றுவது நோக்கம்.
புதிய நடைமுறை குற்றவியல் விசாரணைகளில் காவல்துறைக்கு உதவும் என்று ஜோகூர் வீடமைப்பு, மாநில அரசாங்கக் குழுத் தலைவர் ஜஃப்னி ஷுகோர் கூறியதாக ‘த ஸ்டார்’, ‘ஏஷியா நியூஸ் நெட்வொர்க்’ ஆகியவை தகவல் வெளியிட்டுள்ளன.
காவல்துறையின் அணுக்கமான ஒத்துழைப்புடன் இத்தகைய கேமராக்கள் 2027ஆம் ஆண்டு வரை கட்டங்கட்டமாகப் பொருத்தப்படவிருக்கின்றன என்று அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவுத் திறன்கொண்ட கண்காணிப்பு கேமராக்களை உள்ளூர் மன்றங்களையும் காவல்துறையையும் சேர்ந்த அமலாக்க அதிகாரிகள் இதற்கான செயல்பாட்டு நிலையங்களிலிருந்து அணுக்கமாகக் கண்காணிப்பர்.
‘கிரேட்டர் ஜோகூர் பாரு’ வட்டாரத்தில் நான்கு உள்ளூர் அமைப்புகளின் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் பகுதிகளில் இத்தகைய 1,800 கேமராக்கள் பொருத்தப்படும் என்று திரு ஜஃப்னி கூறினார்.
ஜோகூர் மாநில அரசாங்கம் முக்கியச் சாலைகளில் உள்ள போக்குவரத்துச் சமிக்ஞைக் கட்டமைப்பையும் மேம்படுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்தால் சாலையைப் பயன்படுத்துவோர் அதுகுறித்து ஒரு செயலி வழியாகப் புகாரளிக்கலாம் என்று திரு ஜஃப்னி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குக் கம்பங்களில் அவசர உதவி கோருவதற்கான பொத்தானும் அமைக்கப்பட்டிருக்கும். இதுவரை இத்தகைய 33 போக்குவரத்து விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவுத் திறன்கொண்ட கண்காணிப்பு கேமாராக்களால் பொதுப் பாதுகாப்பு மேம்பட்டுள்ளதாக ஜோகூர் பாரு மேயர் முகமது நூரஸாம் ஒஸ்மான் கூறினார். நகரில் மேம்பட்ட போக்குவரத்து நிர்வாகத்திற்கு வகைசெய்வதோடு இத்தகைய கேமராக்கள் அவசர உதவிக் கோரிக்கைகளுக்கு விரைந்து பதிலளிக்கவும் உதவும் என்றார் அவர்.
குற்றச் சம்பவங்களைப் பதிவுசெய்து அவற்றின் தொடர்பில் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளவும் இவை உதவும்.

