வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபரான திருவாட்டி கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக உறுதிப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்கும் மின்னியல் வாக்களிப்பு முறையின் மூலம் அவர் அதிபர் தேர்தல் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டைத் தொடங்கிவைக்கும் வண்ணம் நடத்தப்படும் நேரடி வாக்களிப்பு முறைக்குப் பதிலாக மின்னியல் வாக்களிப்பு நடைபெறுகிறது.
இவ்வாண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என்று அதிபர் ஜோ பைடன் அண்மையில் அறிவித்தார். அதற்குப் பிறகு இரண்டு வாரங்கள்கூட நிறைவுறாத நிலையில் 52 வயது ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட வலுவான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாட்டி ஹாரிஸ், அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டோனல்ட் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடும் நிலையில் இருக்கும் ஒரே ஜனநாயகக் கட்சி உறுப்பினராக விளங்குகிறார்.
முதற்கட்ட வாக்களிப்பு நடவடிக்கையில் சுமார் 4,000 பேராளர்கள், அடித்தள ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் திருவாட்டி ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர். மின்னியல் வாக்களிப்பு முறை, ஐந்து நாள்கள் நீடிக்கும்.
இதுவரை வேறு எந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் அதிபர் தேர்தலில் திருவாட்டி ஹாரிசின் இடத்தை எடுக்க முன்வரவில்லை. அதனைத் தொடர்ந்து திருவாட்டி ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் முதல் கருப்பின, தெற்காசியப் பெண்ணாக விளங்குவார். தேர்தலில் போட்டியிட அவரை ஜனநாயகக் கட்சியினர் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதுதான் மிச்சம்.
கையெழுத்திட்ட பேராளர்களில் 99 விழுக்காட்டினர் திருவாட்டி ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தேசிய ஜனநாயகக் கட்சிக் குழு (டிஎன்சி) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அதிபர் தேர்தல் வேட்பாளராக நியமிக்கப்படத் தேவையான 300 கையெழுத்துகளை அக்கட்சியில் வேறு யாரும் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
வாக்களிப்பு முடிவுகள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) வெளிவரக்கூடும்.