ஜோகூர் பாரு: வாகன நுழைவு அனுமதி (விஇபி) கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஏறக்குறைய 40 விழுக்காடு போதுமான ஆவணங்கள் இன்றி சமர்ப்பிக்கப்பட்டதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்து உள்ளார்.
இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 58,700 விண்ணப்பங்கள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
வாகன நுழைவு அனுமதி முறை அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும் என்று மே 28ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புக்குப் பின்னர் அதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“மே 28ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை மொத்தம் 58,791 விண்ணப்பங்கள் இணையம் வாயிலாகவும் நேரடியாகவும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. சில விண்ணப்பங்கள் ஒருமுறைக்கு மேல் அளிக்கப்பட்டதைக் கவனித்தோம்,” என்று திரு லோக் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) கூறினார்.
டங்கா பேயில் உள்ள வாகன நுழைவு அனுமதிக்கான அலுவலகத்தைப் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“கடந்த ஈராண்டுகளில் பெறப்பட்டதைக் காட்டிலும் இரண்டு மாதங்களில் அதிக விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம்.
“வந்து சேர்ந்தவற்றில் 19,640 விண்ணப்பங்கள் வாகன நுழைவு அனுமதிக்காக வழங்கப்பட்ட குறிச்சொல்லைப் பயன்படுத்தி நிரப்பப்பட்டு உள்ளன.
“மேலும், ஏறக்குறைய 40 விழுக்காட்டு விண்ணப்பங்கள், அதாவது 24,104 விண்ணப்பங்கள் அரைகுறையாக நிரப்பப்பட்டு இருந்தன. அது அனுமதி வழங்குவதற்கான நடைமுறையில் தாமதம் ஏற்படுத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
கார் உரிமையாளரின் காப்புறுதிச் சான்றிதழ், வாகன உரிமைச் சான்றிதழ், உரிமையாளரின் அடையாள அட்டை போன்ற அவசியமான ஆவணங்களுடன் அத்தகைய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை
“போதுமான ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்களை பரிசீலிக்க இயலாது,” என்று அமைச்சர் லோக் விளக்கினார்.
முன்பதிவு செய்த பல சிங்கப்பூரர்கள் விண்ணப்ப நடைமுறையைப் பூர்த்தி செய்ய வாகன நுழைவு அனுமதி நிலையத்திற்கு நேரடியாகச் செல்வதையே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“வாகன நுழைவு அனுமதி முறை நடப்பிற்கு வர இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால், சிங்கப்பூர் வாகன உரிமையாளர்களிடம் இருந்து மேலும் 50,000 விண்ணப்பங்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு லோக் கூறினார்.