ஜோகூர் பாரு: அடுக்குமாடிக் குடியிருப்பின் 16ஆவது மாடியிலிருந்து இரண்டு வயதுச் சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் மலேசியாவின் ஜோகூர் பாருவில் நிகழ்ந்தது.
அங்குள்ள தாமான் தயா பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து, அன்றிரவு 9.15 மணியளவில் தகவல் கிடைத்ததாக ஜோகூர் பாரு காவல்துறைத் தலைவர் ராவுப் செலாமட் கூறினார்.
இரவு 8.50 மணியளவில் சம்பவம் நிகழ்ந்தது என்றும் 56 மற்றும் 78 வயது நிரம்பிய இணையர், அவள் விழுந்து கிடந்ததைக் கண்டனர் என்றும் அவர் சொன்னார். அந்த இணையர் இருவரும் அவளுடைய உறவினர்கள் எனக் கூறப்பட்டது.
“சம்பவத்திற்குச் சற்று முன்னர்தான், அச்சிறுமியும் அவளுடைய குடும்பத்தினரும் அங்கிருந்த நீச்சல் குளத்தில் ஓய்வாகப் பொழுதைக் கழித்தனர். பின்னர் அந்த இணையர், அவளை 16ஆம் தளத்திலுள்ள தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அதே கட்டடத்தின் ஏழாம் தளத்திலுள்ள சலவையகத்திலிருந்து தன் தாயும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் திரும்புவதற்காக அச்சிறுமி காத்திருந்தாள்,” என்று திரு ராவுட் விவரித்தார்.
அச்சிறுமியை வசிப்பறையில் விட்டுவிட்டு, இணையர் இருவரும் தொழச் சென்றுவிட்டனர். தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பியபின் குழந்தை வீட்டில் இல்லாததைக் கண்டு அவர்கள் திடுக்கிட்டனர். அதனைத் தொடர்ந்து, அவளைத் தேடியபோது, அவள் எட்டாவது தளத்தில் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் காவல்துறை அறிக்கை தெரிவித்தது.
தன் வீட்டின் படுக்கையறையில் குறுக்குக்கம்பிகள் பொருத்தப்படாத சன்னல் வழியாக அச்சிறுமி விழுந்திருக்கலாம் என நம்பப்படுவதாகத் திரு ராவுப் கூறினார்.

