அங்கோரில் திருமண உடையில்புகைப்படம் எடுக்க அனுமதி

அங்கோரில் திருமண உடையில்புகைப்படம் எடுக்க அனுமதி

2 mins read
165e996f-461b-4195-8b64-a947b2513d9e
12வது நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோயில்கள், அங்கோர் வளாகம் கம்போடியாவின் அற்புதமான இடமாக விளங்குகிறது. - கோப்புப் படம்: லெஸ்லி கோ

உலகின் பிரபலமான சுற்றுலாத் தளமான கம்போடியாவின் அங்கோரில் திருமணத்துக்கு முன்பு திருமண உடையில் விரும்பியது போல புகைப்படங்களை எடுத்துக் கொள்ள வெளிநாட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற அங்கோர் தொல்பொருள் பூங்காவில் புகைப்படங்களை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனேஸ்கோ பட்டியலில் உலகின் பாரம்பரிய இடமாக அங்கோர் இடம் பிடித்துள்ளது. கம்போடியாவின் வடமேற்கில் உள்ள சியம் ரீப் மாநிலத்தில் அந்த இடம் அமைந்துள்ளது.

கம்போடிய பிரதமரான ஹுன் மானெட், அங்கோரை பின்னணியாகக் கொண்டு திருமணத்துக்கு முந்திய நிழற்படங்களை உள்ளூர், வெளிநாட்டவர்கள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார்.

அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களை யூடியூப், ஃபேஸ்புக், டிக்டாக், உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளலாம்.

“திருமணத்திற்கு முன்பு தங்களுடைய பாரம்பரிய உடையில் புகைப்படங்களை எடுக்க இனி முன் அனுமதி பெற வேண்டியதில்லை,” என்று நோம்பென்னில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பில் திரு ஹுன் மானெட் கூறினார்.

“இருந்தாலும் சுற்றுலாப் பயணிகள் அங்கோரின் நடத்தை நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

“ஆபாசமாக உடைகளை அணியாதீர்கள், ஆபாசப் படங்களை எடுக்காதீர்கள், எங்களுடைய கலாச்சார அம்சங்களை மீறாதீர்கள், ஏற்பில்லாத புகைப்படங்களை எடுக்காதீர்கள்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய, அனைத்துலக ஊடகங்களும் பழங்கால இடத்தில் இலவசமாக புகைப்படம் எடுக்கலாம். ஆனால் அவர்கள் முதலில் அப்சரா தேசிய ஆணையத்திடம் புகைப்படம் எடுப்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு முதலில் அனுமதி பெற வேண்டும் என்று பிரதமர் ஹுன் மானெட் கூறினார்.

திரைப்படம், வர்த்தகரீதியிலான பயன்பாடு, டிரோன் புகைப்படம் போன்றவற்றுக்கு அனுமதி கேட்டு அப்சரா தேசிய ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்