பெய்ருட்: படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா ராணுவத் தளபதியின் இறுதி ஊர்வலம் பெய்ருட்டில் நடந்துகொண்டு இருந்த அதேவேளை ஆயிரக்கணக்கானோர் நடன நிகழ்ச்சி ஒன்றுக்குப் படையெடுத்துச் சென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா ராணுவத் தளபதி ஃபுவாட் ஷுக்கரின் இறுதி ஊர்வலம் லெபனான் தலைநகர் பெய்ருட்டில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) தெற்கு லெபனான் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் வான்வழியாக நடத்திய தாக்குதலில் ஷுக்கர் கொல்லப்பட்டார்.
ராணுவ உடையில் இருந்த பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கறுப்புச் சின்னம் அணிந்திருந்தனர். ஹிஸ்புல்லா போராளிக் குழுவின் கோட்டை என்று கருதப்படும் பெய்ருட்டின் தென்பகுதிப் புறநகர்கள் வழியாக இறுதி ஊர்வலம் சென்றது.
அன்று மாலை பெய்ருட் நீர்முகப்பில் உள்ள நகர் முழுவதும் இருந்து ஏறக்குறைய 8,000 பேர் திரண்டு சென்று நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர்.
‘மய்யாஸ்’ என்னும் நடனக் குழு அந்நிகழ்ச்சியை நடத்தியது. அந்தக் குழு, கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்காவின் நடனத் திறனாளரைக் கண்டறியும் தொலைக்காட்சிப் போட்டியில் வெற்றி பெற்றது.
அது பற்றி 45 வயது மனித உரிமை ஆர்வலரான ஒல்கா ஃபர்ஹாட் என்னும் பெண்மணி ஊடகங்களிடம் பேசினார்.
“காஸாவிலும் தென்லெபனானிலும் மக்கள் மடிவதைக் கண்டு வருந்துகிறேன். ஆனால், அங்கு நடைபெற்ற செயல்களுக்குத் துப்பாக்கியைத் தூக்கி, சண்டை போடுவதன் மூலம் மட்டுமே எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்பதல்ல.
தொடர்புடைய செய்திகள்
“குதூகலம், கொண்டாட்டம் மற்றும் கலைகளும் எதிர்ப்பின் அம்சங்களே,” என்று அவர் ஏஎஃப்பி செய்தியிடம் கூறினார்.
ராணுவத் தளபதி ஷுக்கரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சில மணிநேரங்களில் அந்த இசை நிகழ்ச்சி வாணவேடிக்கையுடன் தொடங்கியது.
நிகழ்ச்சியின் தலைப்பு ‘கியூமி’. அரபு மொழியில் ‘எழுச்சிகொள்’ என்பது அதற்குப் பொருள்.
பல தசாப்தங்களாக சண்டையிலும் வன்முறையிலும் சிக்கி, ஆண்டுக்கணக்கில் பொருளியல் சிரமத்தில் தத்தளிக்கும் லெபனான் தலைநகருக்குத் தெம்பூட்டும் விதமாக அந்தத் தலைப்பு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
போரிடத் துடிக்கும் குழு, சண்டையையும் போரையும் பொருட்படுத்தாக குழு என்று லெபனான் இருவேறு கருத்துகளைக் கொண்ட மக்களால் பிளவுபட்டு இருப்பதாக திருவாட்டி ஃபர்ஹாட் கூறினார்.
“இரண்டு தரப்பினரின் கருத்துகளும் புரிகிறது. ஆனாலும், சண்டை, போர், நெருக்கடி என்று பலவற்றையும் சந்தித்து அலுத்துப்போய் விட்டது. வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கிறோம்,” என்றார் அவர்.

