நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடத் தேவைப்படும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவை துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெற்றுவிட்டார். வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) அது உறுதி செய்யப்பட்டது.
அதன் மூலம், அதிபர் தேர்தலுக்கு ஜனநாயகக் கட்சி தேர்ந்து எடுத்து இருக்கும் முதல் கறுப்பினப் பெண், தெற்காசிய வம்சாவளிப் பெண் என்னும் பெருமையை திருவாட்டி கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
நவம்பர் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிராகக் களமிறங்கிய தற்போதைய அதிபர் ஜோ பைடன் கடந்த மாத இறுதிவாக்கில் போட்டியில் இருந்து பின்வாங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தேர்தல் களத்தில் இறங்கும் வாய்ப்பு துணை அதிபரான கமலா ஹாரிசுக்குக் கிட்டியது.
ஜனநாயகக் கட்சியில் அவருக்கு எதிராக எவரும் களமிறங்கவில்லை. இருப்பினும் வேட்பாளரை உறுதி செய்ய மின்னிலக்க வாக்குப்பதிவை அக்கட்சி நடத்துகிறது.
அந்த ஐந்து நாள் வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.
அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக வெற்றிபெற 2,350 வாக்குகள் தேவை. ஆனால், திருவாட்டி கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏற்கெனவே 3,923 வாக்குகள் கிடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஜனநாயகக் கட்சியின் 90 விழுக்காட்டு உறுப்பினர்கள் அவரையே வேட்பாளராகத் தேர்ந்து எடுக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி கமலா ஹாரிஸ் வேட்பாளர் நியமனத்தை ஓரிரு நாளில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்வார். துணை அதிபருக்கான வேட்பாளரை அப்போது அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதம் 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சிக்காகோவில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் அதிகாரபூர்வ வேட்பாளரை அக்கட்சி அறிவிக்கும் என்று தெரிகிறது.
“போதுமான ஆதரவைப் பெற்றிருப்பதை அறிந்து மகிழ்கிறேன். இந்த மாதத்தின் பிற்பகுதியில் நாம் சிக்காகோவில் ஒரு கட்சியினராக ஒன்றிணைந்து இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வைக் கொண்டாட இருக்கிறோம்,” என்று திருவாட்டி கமலா ஹாரிஸ் தெரிவித்து உள்ளார்.