கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் மத்திய பள்ளதாக்குப் பகுதியில் 6,000க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடிவரும் தீ, இவ்வாண்டின் ஆகப் பெரிய தீச் சம்பவம் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்தத் தீ கலிஃபோர்னியா வரலாற்றில் பதிவாகியுள்ள நான்காவது பெரிய காட்டுத் தீ என்று தெரிவிக்கப்படுகிறது.
பருவநிலை ஆய்வாளர்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்ற முன்னுரைப்பு பொய்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இங்குள்ள 37.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, அத்துடன் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்று ஆகியவை தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை என்று தெரிகிறது. கலிபோர்னிய மாநிலத்தின் தலைநகர் சேக்ரமென்டோவுக்கு 160.9 கிலோமீட்டர் தெலைவில் இந்தக் காட்டுத் தீ பரவுவதாகக் கூறப்படுகிறது.
எரிந்துகொண்டிருந்த கார் ஒன்றை சிக்கோ நகருக்கு அருகே உள்ள பள்ளத்தாக்கில் ஜூலை 24ஆம் தேதி ஒருவர் தள்ளிவிட்டதால் இங்கு கொழுந்துவிட்டு எரியும் தீ ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்தத் தீ இதுவரை 162,200 ஹெக்டர் நிலத்தை பாழ்படுத்திவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ பரவும் பகுதி லாஸ் ஏஞ்சலிஸ் நகரைவிடப் பெரிய நிலப்பரப்பு என்றும் கூறப்படுகிறது.
காட்டுத் தீக்கு காரணமான அந்த 42 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் மீது தீ மூட்டிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. அந்த ஆடவருக்கு பிணை வழங்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

