தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிளந்தான் மாநிலத் தொகுதியைக் கைப்பற்ற அம்னோ தீவிர முயற்சி

2 mins read
70ac3142-b4be-4e4a-8dd7-2560ce3504fb
நெங்கிரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கி உள்ள வேட்பாளர்கள். - படம்: பெர்னாமா

குவா மூசாங்: மலேசியாவின் கிளந்தான் மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஆளும் கூட்டணியில் இடம்பெற்று உள்ள அம்னோ முனைப்புடன் உள்ளது.

தாமான் நெகரா வனப்பூங்காவாலும் இயற்கை அழகாலும் சூழப்பட்ட நெங்கிரி சட்டமன்றத் தொகுதியில் ஆகஸ்ட் 17ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சாலை வழியாக மூன்று மணிநேரத்தில் அடைந்துவிடக் கூடிய தூரத்தில் அந்தத் தொகுதி உள்ளது.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) முடிவுற்றது.

மனுக்களைப் பெற்ற தேர்தல் ஆணையம், அம்னோ வேட்பாளரும் பிபிபிஎம் கட்சி வேட்பாளரும் போட்டியிடத் தகுதி பெற்றிருப்பதாக அறிவித்தது.

14 நாள் பிரசாரத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 17ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும்.

பிபிபிஎம் கட்சி எதிர்த்தரப்பு பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் இடம்பெற்று உள்ளது. அக்கட்சி வேட்பாளராக முஹம்மது ரிஸ்வாடி இஸ்மாயில் போட்டியிடுகிறார்.

அதேநேரம், பிரதமர் அன்வாரின் ஆதரவைப் பெற்ற தேசிய முன்னணியை வழிநடத்தும் அம்னோ வேட்பாளராக மாவட்ட இளையர் அணித் தலைவர் முஹம்மது அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கனி களமிறங்கி உள்ளார்.

2023 சட்டமன்ற பொதுத் தேர்தலில் 20,000க்கும் மேற்பட்ட வாக்குகள் நெங்கிரி தொகுதியில் பதிவாயின.

எதிர்த்தரப்பின் கோட்டையாகக் கருதப்படும் அந்தத் தொகுதியில் 810 வாக்குகள் வித்தியாசத்தில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

ஏற்கெனவே இந்தத் தொகுதி தேசிய முன்னணிவசம் இருந்தது. இந்த இடைத்தேர்தலில் பிரசார உத்தியை மாற்றினால் மீண்டும் நெங்கிரி அம்னோவசம் வரும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்