கோலாலம்பூர்: மலேசியர்களுக்கென தனித்துவமான சமூக ஊடகத் தளத்தை உருவாக்க அரசாங்கம் முயன்று வருவதாக மலேசிய தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்ஸில் தெரிவித்து உள்ளார்.
நடப்பில் உள்ள சமூக ஊடகத் தளங்கள் மலேசியர்கள் மூலம் அதிகம் சம்பாதித்தாலும் பாதுகாப்பை உறுதிசெய்ய அவை தவறுவதால் இந்த யோசனை பிறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“கடந்த ஆண்டு ஃபேஸ்புக் மூலம் மட்டும் மலேசிய மக்கள் 600 மில்லியன் டாலர் லாபம் ஈட்டியதாக மதிப்பிடப்படுகிறது. இருப்பினும், தங்களது தளத்தின் பயன்பாடு பாதுகாப்பானது என்பதை அவை உறுதி செய்கின்றனவா என்பதில் சந்தேகம் உள்ளது,” என்று திரு ஃபாமி கூறினார்.
மேலும் அவர், “சமூக ஊடகத் தளங்களின் கடப்பாடு போதவில்லை. எனவே, நிலைமையை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. அரசாங்கம் சொந்த சமூக ஊடகத் தளத்தை உருவாக்குவது என்பது எளிதான செயல் அல்ல.
“இருப்பினும், சில நாடுகள் அதனைச் சாதித்துள்ளன. அந்த சாத்தியத்தை அரசாங்கம் கவனித்துச் செயல்படும்,” என்று ஞாயிற்றுக்கிழமை இரவு பேரணி ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பாலஸ்தீனம் தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளை ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் அண்மையில் நீக்கியதைத் தொடர்ந்து, புதிய யோசனையுடன் முன்வந்த பிரபல தொலைக்காட்சி நட்சத்திரம் அஸ்னில் நவாவியைத் தாம் சந்தித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் மெட்டா நிறுவனத்தினரைச் சந்திக்க இருப்பதாகக் கூறிய அவர், பிரதமரின் சமூக ஊடகக் கணக்குகளில் இருந்து பாலஸ்தீனம் தொடர்பான பதிவுகளை நீக்கியது குறித்து அப்போது அவர்களிடம் விளக்கம் கேட்க இருப்பதாகச் சொன்னார்.
“பிரதமரின் ஃபேஸ்புக் கணக்கு மட்டுமின்றி பல்வேறு சமூக ஊடகங்களின் அதிகாரத்துவ கணக்குகளைப் பட்டியலிட்டு, அவற்றின் உள்ளடக்கங்களை நீக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட தளங்களிடம் கூறி இருக்கிறோம். அவர்கள் தங்களது உறுதிமொழியைக் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன்,” என்றும் திரு ஃபாமி குறிப்பிட்டார்.

