கெய்ரோ: ஹமாஸ், அதன் காஸா தலைவரான யாஹ்யா சின்வாரை அடுத்த தலைவராக அறிவித்துள்ளது.
கடந்த வாரம் ஈரானின் டெஹ்ரான் நகரில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டது, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு பின்பற்றப்பட்ட ஹமாஸின் தீவிரமான பாதையை வலுப்படுத்துவதாக உள்ளது.
சின்வார், பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்திய தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கும் அவர் மூளையாகச் செயல்பட்டார் என்று சொல்லப்படுகிறது.
காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து அவரை கொல்ல இஸ்ரேல் பல முறை முயற்சி செய்தது. ஆனால் அவர் தொடர்ந்து காஸாவில் மறைந்திருந்தார்.
படுகொலை செய்யப்பட்ட இஸ்மாயில் ஹனியேவின் வாரிசாக ஹமாஸ் அரசியல் இயக்கத்தின் அடுத்த தலைவராக தளபதி யாஹ்யா சின்வார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
டெஹ்ரானில் ஹனியே கொல்லப்பட்டதால் இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதலை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் ஹமாசுக்கு புதிய தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
“இந்த நியமனத்தால், காஸா போருக்கான தீர்வுக்கு சின்வாரை இஸ்ரேல் எதிர்கொண்டாக வேண்டும்,” என்று எகிப்து, கத்தார் இடையிலான சமரசப் பேச்சை நன்கு அறிந்த அரச தந்திரி ஒருவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சமரசப் பேச்சில் போருக்கு ஒரு முடிவு ஏற்படும் என்றும் காஸாவில் சிக்கியுள்ள 115 இஸ்ரேலிய, வெளிநாட்டு பிணைக் கைதிகள் விடுவிக்க வழி ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சின்வார் தனது வாழ்நாளில் பாதியை இஸ்ரேலிய சிறையில் கழித்துள்ளார். ஹனியே கொல்லப்பட்ட பிறகு ஹமாஸின் சக்திவாய்ந்த தலைவராக சின்வார் இருக்கிறார்.