கொழும்பு: இலங்கையில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனான 38 வயது நாமல் ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய ராஜபக்சே குடும்பம் களத்தில் இறங்கியதை அடுத்து, இலங்கையில் அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ளது. செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் போட்டி வலுத்து வருகிறது.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் தேர்தலில் போட்டியிடத் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆகஸ்ட் 15 முதல் வேட்புமனுத் தாக்கல் நடைபெற உள்ளது.
“கவனமான பரிசீலனைக்குப் பின்னர், நாமல் ராஜபக்சேவை அதிபர் வேட்பாளராக நிறுத்த கட்சி தீர்மானித்தது,” என்று கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்,
கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) இடம்பெற்ற சிறப்பு நிகழ்வில், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருமான நாமல், மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ராஜபக்சே குடும்ப உறுப்பினரின் மறுபிரவேசம் தேர்தலுக்கு முன்னதாகவே அரசாங்கத்தில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய அதிபரான ரணில் விக்கிரமசிங்க எஸ்எல்பிபி உறுப்பினர் அல்லர். எனினும் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2022ன் மோசமான பொருளியல் நெருக்கடியைச் சமாளித்து, நாட்டை முன்னேற்றி வரும் ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் அதிபராக வேண்டும் என்று கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
2022ல் நடந்த மக்கள் போராட்டைத் தொடர்ந்து முன்னைய அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகினர். தொடர்ந்து 22.07.2022 அன்று நாடாளுமன்றத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார்.
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் எஸ்எல்பிபி உட்பட 9 கட்சிகளை சேர்ந்த 102 உறுப்பினர்கள் ரணிலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் 70 பேர் எஸ்எல்பிபி கட்சி உறுப்பினர்கள்.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூன்று தரப்பாக பிரிந்து மூன்று வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கின்றது.
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சிலர், அக்கட்சி சார்பில் போட்டியிரும் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது.
பலமுனைப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வெற்றியைத் தீர்மானிப்பது தமிழர்கள் வாக்காக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதனால், தமிழர் கட்சிகள், தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதேவேளையில், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகள் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்துவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், முக்கிய கட்சியான தமிழரசுக் கட்சி இதில் பிளவுபட்டு நிற்கிறது.
அதிபர் தேர்தலை புறக்கணிக்ககோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வுவொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (06) முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அதிபர் தேர்தலை புறக்கணிக்கக் கோரி வருகிறது.
அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளர் நிறுத்துவதோ அல்லது பெரும்பான்மை இனத்தவர் ஒருவரை தெரிவு செய்வதிலோ எவ்வித பயனும் இல்லை என்றும் தேர்தலை புறக்கணிப்பதே தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு தீர்வு எனவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கூறியுள்ளார்.