கார் ஓட்டியதாக 12 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு

2 mins read
d8f94ae6-f283-4bde-8fc6-4e9003f4f748
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறுவனுக்கு 2,000 ரிங்கிட் (S$590) வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: வயது குறைவானவராக இருந்தும், சாலையில் கார் ஓட்டியதாக 12 வயது சிறுவன் மீது மலேசிய நீதிமன்றம் ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று குற்றம் சுமத்தியது.

ஜூலை 28ஆம் தேதியன்று சிலாங்கூர் மாநிலத்தின் பூச்சோங் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியைச் சுற்றி அந்தச் சிறுவன், தமது தந்தையின் காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.

இதை ஒருவர் காணொளி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்.

சிறுவன் கார் ஓட்டியபோது அவனது இரண்டு இளைய சகோதரர்கள் காரில் இருந்ததாகவும் மூவரும் பாதுகாப்பு வார் அணியவில்லை என்றும் காணொளியில் பார்க்க முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து மலேசியக் காவல்துறை விசாரணை நடத்தியது..

சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை.

அவனது தந்தை பாகிஸ்தானைச் சேர்ந்த மலேசிய நிரந்தரவாசி என்று தெரிவிக்கப்பட்டது.

அவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகம் தெரிவித்தது.

சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு 2,000 ரிங்கிட் (S$590) வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மகனைக் கவனித்துக்கொள்ளாமல் அவனைப் புறக்கணித்ததாகவும் வயது குறைந்த மகனை கார் ஓட்ட அனுமதித்ததாகவும் சிறுவனின் தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மகனைக் கவனித்துக்கொள்ளாமல் புறக்கணித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 53 வயது முகம்மது சலீம் ஃபஸால் குதாவுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை, 50,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வயது குறைந்த மகனைக் கார் ஓட்ட அனுமதித்தற்கு அவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம், ஆறு மாதச் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தந்தையும் மகனும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்