போக்குவரத்தின் எதிர்திசையில் சென்ற மோட்டார் சைக்கிள்கள்; ஒருவர் கைது

போக்குவரத்தின் எதிர்திசையில் சென்ற மோட்டார் சைக்கிள்கள்; ஒருவர் கைது

1 mins read
7d555856-6e49-4e75-b50d-7ec626f67170
போக்குவரத்தின் எதிர்திசையில் பல மோட்டார் சைக்கிள்கள் கும்பலாக, அபாயகரமான முறையில் சென்றதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது. - படம்: டிக்டாக்

ஜார்ஜ்டவுன்: போக்குவரத்தின் எதிர்திசையில் பல மோட்டார் சைக்கிள்கள் கும்பலாக, அபாயகரமான முறையில் சென்றதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்ததை அடுத்து, மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரை மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது.

ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் காவல்துறையினர் சாலையில் தடுப்பு அமைத்து வாகனங்களைச் சோதனையிட்டனர்.

அவர்களிடமிருந்து தப்பிக்க அந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் இரவு 7 மணி அளவில் போக்குவரத்துக்கு எதிர்திசையில் சென்றதாகக் கூறப்படுகிறது.

அந்த மோட்டார் சைக்கிள்கள் பட்டர்வொர்த் அவுட்டர் ரிங் சாலையின் முதல் மற்றும் மூன்றாவது தடத்தில் எதிர்திசையில் சென்றதை அந்த 37 வினாடிக் காணொளி காட்டியது.

மற்ற வாகனங்கள் சாலையின் நடுவில் உள்ள தடத்தில் சென்றன.

மற்ற வாகனங்களைப் பார்த்து அந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்து அபாயகரமான முறையில் ஓட்டிச் சென்றனர்.

குண்டர் கும்பல் உறுப்பினர்களைப் பிடிக்க சாலைத் தடுப்பு அமைக்கப்பட்டதாகவும் கைது செய்யப்படாமல் இருக்க அந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் போக்குவரத்துக்கு எதிர்திசையில் சென்றதாகவும் நார்த் செபராங் பிராய் காவல்துறைத் தலைவர் அன்வார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 25 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்