புதுடெல்லி: பங்ளாதேஷில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததில் பிரதமர் இல்லத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் சென்ற ஷேக் ஹசினா பிரதமர் பதவியிலிருந்து விலகவில்லை என்று அவரது மகனும் ஆலோசகருமான சஜீப் வாஸாத் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பங்ளாதேஷில் வெடித்த புரட்சியில் அங்கு கிட்டத்தட்ட 300 பேர் மரணமடைந்தனர். இதில் பெரும்பாலனவர்கள் மாணவர்கள். இவர்களின் ஆர்ப்பாட்டங்களைத்துத் தொடர்ந்து ஷேக் ஹசினாவின் 15ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தற்பொழுது ஷேக் ஹசினா இந்தியாவில் தங்கியுள்ளார்
“என் தாயார் அதிகாரபூர்வமாக பதவி விலகவில்லை. அவருக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை,” என்று அவர் மகன் சஜீத் வாஸாத் வாஷிங்டனில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“அவர் அறிக்கை வெளியிட்டு தனது பதவி விலகலை அறிவிக்க இருந்தார். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது பிரதமர் இல்லத்தை நோக்கிப் பேரணியாகக் கிளம்பத் தொடங்கினர். அப்பொழுது அவருக்கு நேர அவகாசம் கிடைக்கவில்லை. அவருக்கு தனது தேவையான பொருள்களைக் எடுத்து வைத்துக்கொள்ளக்கூட நேரமில்லை. அரசியல் நிர்ணயச் சட்டத்தின்படி, அவர் இன்னமும் பங்ளாதேஷ் பிரதமரே,” என்று ஷேக் ஹசினாவின் மகன் விளக்கினார்.
அதிபர் ராணுவத் தலைவர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஆகியோரைக் கலந்தாலோசித்து நாடாளுமன்றத்தை கலைத்தபோதிலும், பிரதமர் பதவி விலகாத நிலையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, ஷேக் ஹசினா பதவி விலகக் காரணமாக இருந்த மாணவர் தலைவர் தற்பொழுது இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறார். ஷேக் ஹசினா நாட்டுக்கு திரும்பியதும் அவர் ஆட்சியில் ஆர்ப்பாட்டங்களின்போது ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்பாக அவர்மீது வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.