தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கா: மத்தியக் கிழக்கில் அதிகரிக்கும் பதற்றநிலை யாருக்கும் பலனளிக்காது

1 mins read
3473130a-a700-4d41-bdf3-42918c1add41
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: மத்தியக் கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றநிலை யாருக்கும் பலன் அளிக்காது என்று இஸ்‌ரேலியத் தற்காப்பு அமைச்சர் யோவாவ் கெல்லன்ட்டிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

காஸா போர் நிறுத்தம் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.

இஸ்‌ரேலியத் தற்காப்பு அமைச்சருடன் திரு பிளிங்கன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே அண்மையில் ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார்.

அந்தப் படுகொலைக்கு இஸ்‌ரேல்தான் காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, ஈரானின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பில் முக்கிய தளபதிகளில் ஒருவரான ஃபுவாட் ஷுக்குரை இஸ்‌ரேல் கொன்றது.

திரு ஹனியே, திரு ஷுக்குர் ஆகியோரின் படுகொலைக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான், ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகியவை சூளுரைத்துள்ளன.

இதையடுத்து, தாக்குதலை எதிர்கொள்ள இஸ்‌ரேல் தயாராகி வருகிறது.

ஏற்கெனவே காஸா போர் காரணமாக நிலைகுலைந்திருக்கும் மத்தியக் கிழக்கு, இதன் விளைவாக மேலும் மோசமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

“இஸ்‌ரேலைத் தற்காப்பதில் அமெரிக்கா கடப்பாடு கொண்டுள்ளது. இதை அமைச்சர் பிளிங்கன் மறுஉறுதி செய்துள்ளார்,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்