தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொல்லப்பட்ட மாணவருக்குப் புகழாரம்; ஒன்றுபடும்படி மக்களுக்கு வேண்டுகோள்

1 mins read
8e3babe4-5704-4930-98c0-7bc48003cfce
நோபெல் பரிசு வென்றவரும் பங்ளாதேஷின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகருமான முகம்மது யூனுஸ் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று தேசிய வீரமரணமடைந்தோர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தபின் பொதுமக்களை சந்தித்தார். - படம்: ஏஎஃப்பி

டாக்கா: பங்ளாதேஷின் இடைக்காலத் தலைவர் முகம்மது யூனுஸ் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10ஆம் தேதி) அன்று சமய ஒற்றுமைக்கு அறைகூவல் விடுத்தார்.

அப்பொழுது ஆர்ப்பாட்டங்களில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவரின் தாயை அணைத்து ஆறுதல் கூறினார். பங்ளாதேஷில் பெரிய அளவில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களால் ஷேக் ஹசினாவின் 15 ஆண்டுக்கால ஆட்சி அண்மையில் முடிவுக்கு வந்தது நினைவுகூரத்தக்கது.

நோபெல் பரிசு வென்ற 84 வயது முகம்மது யூனுஸ் பங்ளாதேஷின் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அந்நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும் ஜனநாயக சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில் அவர் பெரும் சவால்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

“புதிய பங்ளாதேஷை உருவாக்குவது நமது பொறுப்பு,” என்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறினார்.

ஷேக் ஹசினாவுக்கு பதவி பறிபோனதை அடுத்து பங்ளாதேஷில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இது அந்நாட்டிலும் இந்தியாவிலும் பலரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“சமயத்தை வைத்து பாகுபாடு பார்க்காதீர்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பங்ளாதேஷில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கொல்லப்பட்ட முதல் மாணவரான அபு சயீத் என்பவருடைய நினைவாக திரு யூனுஸ் வடக்கு நகரான ராங்பூருக்கு வருகை மேற்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்